வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:02:00 (29/06/2018)

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழுவினர் இன்று விசாரணை மற்றும் ஆய்வைத் தொடக்கினர். இந்த விசாரணை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. 

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு

துாத்துக்குடியில் கடந்த மே, 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திட தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது. இக்குழு, ஜுன் 4-ம் தேதி விசாரணையைத் தொங்கி நடத்தி வருகிறது. 3 மாதங்களுக்குள் விசாரணை குறித்த அறிக்கையைச் சமர்பிக்க உள்ளது.

அதேபோல் தேசிய மனித உரிமை ஆணையமும் மாநில மனித உரிமை ஆணையமும் துாத்துக்குடி துாப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றித் தனித்தனியாக நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வசேகர், கந்தையா, காளியப்பன் மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் பட்டியல் இன சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், இவர்களின் இறப்பு குறித்து விசாரணை செய்து ஆய்வு மேற்கொள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழுவினர் இன்று தூத்துக்குடி வருகை தந்தனர். 

இந்த ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் இன்று (28.06.2018) முதல் வரும் 30-ம் தேதி வரை விசாரணை நடத்த உள்ளது. இவ்வாணையம்,  இன்று இந்த 4 பேரின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலவரச் சூழல், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இந்த ஆணையத்தின் துணைத்தலைவர் முருகனிடம் விளக்கம் அளித்தனர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையக் குழு

இது குறித்து ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கூறுகையில், “துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 
பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் 4 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை செய்ய குழுவாக இங்கு வந்துள்ளோம். எங்கள் ஆணையத்துக்கு வந்த தகவலின் அடிப்படையில், இந்த விசாரணை நடத்தப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், துப்பாக்கிச்சூடு நடந்தபோது பணியில் இருந்த அரசு அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணைத் தாசில்தார்கள்  ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது.

இதேபோல, தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளிடமும் விசாரணை செய்ய இருக்கிறோம். விரிவான முறையில் நடக்கும் இந்த விசாரணையின் அறிக்கையை விசாரணைக்குப் பின் குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்க இருக்கிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க