எம்.பி.பி.எஸ் தர வரிசைப் பட்டியலில் சிபிஎஸ்இ, சென்னை மாணவர்கள் ஆதிக்கம்! | CBSE and Chennai Students highly occupied TN medical ranking list

வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (28/06/2018)

கடைசி தொடர்பு:16:43 (30/06/2018)

எம்.பி.பி.எஸ் தர வரிசைப் பட்டியலில் சிபிஎஸ்இ, சென்னை மாணவர்கள் ஆதிக்கம்!

எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் இன்று (28.06.2018) வெளியிடப்பட்டது. இதில், முதல் 10 இடங்களும் சிபிஎஸ்இ மாணவர்களே இடம்பிடித்துள்ளனர். முதல் 10 மாணவர்களில் நான்குபேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தர வரிசைப் பட்டியலிலும் சென்னையைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். 

எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியல்

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பெற்றுக்கொண்டார். 

கலந்தாய்வுக்கான தர வரிசையில் சென்னையைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார். இவர், நீட் தேர்வில் 676 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து, தருமபுரி ராஜ்செந்தூர் அபிஷேக் (656) இரண்டாவது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த பிரவீன் (650), முகமது ஷாகிப் ஹாசன் (644), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் (626), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (625) , திருச்சி மாவட்டம் ஹரி நரேந்திரன் (625), திருநெல்வேலி மாவட்டம் ஆர்த்தி சக்தி பாலா (623), சென்னை யந்தூரி ரூத்விக் (621), ஈரோடு மாவட்டம் ரவி பாரதி (617) ஆகியோர், அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சிபிஎஸ்இ மற்றும் இதர  பாடத்திட்டங்களில் படித்தவர்கள். 

தர வரிசைப் பட்டியலில், மாநகரப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் இடம்பிடித்திருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சென்னையிலிருந்து 2,939 மாணவர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,390 பேர், திருவள்ளுர் மாவட்டத்தில் 1,344 பேர், சேலம் மாவட்டத்தில் 1,317 பேர், வேலூர் மாவட்டத்தில் 1,256 பேர், மதுரை மாவட்டத்தில் 1,251 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1,158 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் 1,155 பேர், திருச்சி மாவட்டத்தில் 1,144 பேரும் இடம்பிடித்துள்ளனர். 

மாவட்டங்கள் எம்.பி.பி.எஸ் தரவரிசையில் தகுதி பெற்றவர்கள்
சென்னை 2939
காஞ்சிபுரம்  1390
திருவள்ளூர்  1344
சேலம்  1317
வேலூர்  1256
மதுரை 1251
கோயம்புத்தூர் 1158
திருநெல்வேலி 1155
திருச்சிராப்பள்ளி  1144
கன்னியாகுமரி  975
விழுப்புரம்  839
கடலூர் 792
ஈரோடு  769
தஞ்சாவூர்  750
தருமபுரி  737
கிருஷ்ணகிரி  716
நாமக்கல் 676
திருப்பூர்  659
தூத்துக்குடி  646
விருதுநகர்  589
திருவண்ணாமலை  587
திண்டுக்கல்  541
புதுக்கோட்டை  423
தேனி  414
சிவகங்கை  373
ராமநாதபுரம்  350
கரூர் 343
அரியலூர் 316
நாகப்பட்டினம் 297
பெரம்பலூர்  211
திருவாரூர்  204
நீலகிரி  148
கேரளா  52
இதர  34
ஆந்திரா 18
கர்நாடகா 4

இதிலிருந்து, நகரப் பகுதி மாணவர்களே அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர் என்பதையும், கிராமப் பகுதி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. 

மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படித்த 21,204 பேரும், சிபிஎஸ்இ/எஸ்.எஸ்.சி.இ, ஐ.எஸ்.சி.இ மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த 6,863 பேரும் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்துவந்தது. இதற்கும் தர வரிசைப் பட்டியல் வழியே விடை கிடைத்திருக்கிறது. தர வரிசையில் 1,000  இடங்களுக்குள் 4 பேரும், 3000 இடங்களுக்குள் 8 பேரும் இடம் பிடித்துள்ளனர். 5,000 ரேங்கில் 16 பேரும், 10,000 தர வரிசையில் 76 பேரும், 15,000 தர வரிசையில் 157 பேரும் இடம்பிடித்துள்ளனர். 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 1,337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.  இதில், 15-க்கும்  குறைவான மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கும் என்பது தர வரிசையின் புள்ளிவிவரங்களின்மூலம் தெரியவந்துள்ளது.