வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (29/06/2018)

கடைசி தொடர்பு:01:30 (29/06/2018)

''சிலை கடத்தல்காரர்களை அரசு காப்பாற்ற நினைக்கிறதா..?'' - கே.பாலகிருஷ்ணன் கேள்வி

சிலை கடத்தல்காரர்களைக் காப்பாற்ற அரசு நினைக்கிறதா என சி.பி.எம். மாநிலச் செயலளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிலை கடத்தல்

 மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் ஆளுநர் மற்றும் அவரது அலுவலகம் சம்பந்தப்பட்டிருப்பதால், விசரணை ஆணையம் அமைப்பதற்கு அவருக்கு தகுதி இல்லை. ஆளுநரை தகுதி நீக்கம் செய்யவில்லை என்றால் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டியது வரும். சேலம் 8 வழிச் சாலை தேவையற்றது, ஏற்கெனவே உள்ள 4 வழி சாலையே போதும், போராடுபவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முன்னாள் எம்.எல்.ஏ.டில்லி பாபுவை அராஜகமாகக் கைது செய்து கேவலமாக நடத்திய டி.எஸ்.பி சுந்தரமூர்த்தியைப் பணி நீக்கம் செய்து, கைது செய்யக் கோரி வரும் 30-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சட்டமன்றத்தில் முதல்வர் பேசும்போது, சுயநலத்துக்காகச் சிலர் போராட்டத்தைத் தூண்டி விடுவதாகக் கூறியுள்ளார். இது கண்டனத்துக்கு உரியது. மக்கள் தானாக முன்வந்து நிலத்தைக் கொடுப்பதாக இருந்தால் ஏன் பலரை கைது செய்ய வேண்டும். இதிலிருந்தே முதல்வர் கூறுவது பொய் என்பது தெரிகிறது. நதிகளை அரசு தனியார் வசம் ஒப்படைக்க முயல்வதாகத் தெரிகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இருப்பதால், மத்திய அரசு சிறப்பு அவசரச் சட்டத்தை நிறைவேற்ற கோரி வரும் 2-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்காக 3-ம் தேதி பெண்கள் பாதுகாப்பு மாநாடு சேலத்தில் நடக்க உள்ளது. சிலைகடத்தல் தொடர்பாக தனக்கு அழுத்தம் வருவதாகச் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்ததன் மூலம் இந்த அரசு சிலை கடத்தல்காரர்களைக் காப்பாற்ற முயல்வதாகத் தோன்றுகிறது’ என்று அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க