"மதுரை வைகை ஆற்றை மீட்டெடுப்பது இயலாத காரியம் இல்லை!" - 'தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங்

'நாம் உயிர் வாழ உதவும் இயற்கைத் தாயை நாம் பாதுகாத்தால்தான், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்' என புரியவைத்த கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.

துரை காந்தி மியூசியத்தில் இன்று (28.06.18) பசுமைவழிச் சாலை பற்றியும், விவசாய நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் கிராமப்புற நீர்நிலைகள் குறித்தும் விழிப்புஉணர்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் கூடுதல் சிறப்பாக ஆறுகளின் வளம் மீட்புத் திட்டங்கள் வெளியிடப்பட்டது. விவசாயப் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தேசிய தண்ணீர் குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படுபவருமான டாக்டர் ராஜேந்திரசிங் பங்கேற்றார்.

அவருடன் காந்திய இயக்கத் தலைவர் கிருஷ்ணம்மாள், காந்திய நினைவு நிதி தலைவர் நடராஜன், காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். மார்கண்டேயன், காந்தி மியூசியம் செயலாளர் ம.ப.குருசாமி ஆகியோர் பங்கேற்றனர். நதிகள் பாதுகாப்பு, விவசாயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய ராஜேந்திர சிங், "மதுரையில் வைகை ஆற்றை மீட்டெடுப்பது ஒன்றும் இயலாத காரியம் இல்லை. மதுரை மாவட்டம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், வைகை ஆற்றை மீட்டெடுக்கும் காரியத்தில் இறங்கியுள்ளனர். நிலத்தின் தன்மையைப் பொறுத்தமட்டில், தமிழ்நாடு மிகவும் நல்லமுறையில் உள்ளது. நாம்தான் இதனை உபயோகப்படுத்தத் தவறுகிறோம். தண்ணீர் ஆதாரம் குறைவாக உள்ள ராஜஸ்தானிலேகூட தண்ணீரை வரவழைத்து விட்டோம். அப்படியிருக்கையில், தண்ணீர் வளம் உள்ள தமிழ்நாட்டில் அதைச் சாத்தியப்படுத்த இயலாதா?  இயற்கை சார்ந்த விஷயங்கள் குறித்து நமக்கு ஆர்வம் மேலிடவேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறையினர் இதில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும். இதற்காக ஐந்து பிரிவுகள் கொண்ட குழு ஒன்று அமைத்துள்ளோம். 

அவற்றில், முதல் குழுவான சிவில் சொஸைட்டியில் (Civil Society) ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலாசார நலன் விரும்பிகள் இருப்பார்கள். இரண்டாவது குழுவான கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் இருப்பர். இதன்மூலம் இளைய தலைமுறையினர் இயற்கைசார்ந்த விஷயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

ராஜேந்திர சிங், மதுரை கூட்டம்

மூன்றாவது குழுவில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், அரசு மற்றும் அரசுசாரா நபர்கள் இருப்பார்கள். நான்காவது குழுவில் "DIAGNOSIS GROUP" இதில் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். ஆறு மாசுபடுதல் மற்றும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்து ஆய்வுசெய்ய இக்குழு உதவும். இறுதி மற்றும் முக்கியக் குழுவாக இருப்பது ட்ரீட்மென்ட் (Treatment Group) குழுவாகும். மற்ற நான்கு குழுக்களும் முடிவுகளை எடுத்தாலும் முக்கியமான இந்தக் குழுவே அதனைச் செயல்படுத்தும்" என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற பலரும் பேசினர். அவர்கள், "மதுரை என்பது காந்தி மற்றும் காந்தியத்தின் வேர் ஆழமாக ஊடுருவிய இடமாகும். இங்கே பலரும் காந்தியத்திற்காக பாடுபட்டு உள்ளனர். குழுவிற்கும் பஞ்சமில்லை. ஆனால், ஒன்றுசேராமல் தனித்தனி தோணிகளாக இருக்கின்றனர். நாம் அனைவரும் சேர்ந்து ஒரு கப்பலாக உருமாறி, நம்முடையத் திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். டாக்டர் ராஜேந்திரசிங் பதிமூன்றாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். 

தற்போதைய சூழலில் சந்தோஷமான விஷயம் என்னவென்றால், வைகை ஆற்றில் சாக்கடை சற்றே குறைந்துள்ளது. அதற்குக் காரணம் முகம்தெரியாத சில தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களைப் போல் மற்றவர்களும் இயற்கையைப் பாதுகாக்க, உழைக்க வேண்டும். பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்குமே இயற்கையை காப்பதில் பங்கு உள்ளது. 'மழை பொய்த்தாலும் தன் ஓட்டத்தை நிறுத்தாத வைகை நதி, தற்போது தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது' இந்நிலையை மாற்றி அமைக்க வேண்டும்" என்றனர்.

'நாம் உயிர் வாழ உதவும் இயற்கைத் தாயை நாம் பாதுகாத்தால்தான், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்' எனப் புரியவைத்த கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!