வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (28/06/2018)

கடைசி தொடர்பு:21:36 (28/06/2018)

"மதுபானம் விலை உயர்வு... பேரதிர்ச்சி!" - மதுகுடிப்போர் சங்கம்

தமிழகத்தின் நிதி பற்றாக்குறையைத் தவிர்க்கவும், வருவாயை அதிகரிக்கவும், 'வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக 12 சதவிகிதம் வரி உயர்த்தப்படும்' என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

ந்நிய நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதியாகும் மது வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்படுகிறது. நேற்று (27-06-2018) மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது பெட்ரோல் - டீசல் - மது பானங்கள் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்தின் நிதி பற்றாக்குறையைத் தவிர்க்கவும், வருவாயை அதிகரிக்கவும், 'வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது பானங்களுக்கு கூடுதலாக 12 சதவிகிதம் வரி உயர்த்தப்படும்' என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. I.M.F.L (Indian-made foreign liquor) என்பவை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகள். இவற்றுக்கு முறையே 56 சதவிகிதத்திலிருந்து 62 சதவிகிதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. எலைட் கடைகளில் நேரடியாக அந்நிய மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மதுபானங்களுக்கு கூடுதலாக 12 சதவிகிதம் வரி உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

மதுபானம்

'' 'மதுவே வேண்டாம்' என்று சொல்பவர்களுக்கும், மதுக்கடைகளை ஒழிப்பதற்காகப் போராடுபவர்களுக்கும் இது எந்தவித பிரச்னையையும் ஏற்படுத்தாது. ஆனால், தினமும் வேலை செய்த களைப்பில் இருப்பவர்களுக்கும், மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு தமிழக அரசு செய்தது மிகப்பெரிய துரோகம்'' என்கிறார் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புஉணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவரான செல்லப்பாண்டியன்.

இதுகுறித்து செல்லப்பாண்டியன் நம்மிடம் பேசியபோது, "இந்தியாவில், தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளை அவற்றின் தரம் செல்லபாண்டியன்கொண்டு மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர். சாதாரணமான மது வகைகள், நடுத்தர மது வகைகள் மற்றும் உயர்தர மது வகைகள். இதில் சாதாரண மது வகைகளுக்கு 56 - 58 சதவிகிதமும், நடுத்தர மது வகைகளுக்கு 58 -59 சதவிகிதமும், உயர்தர மது வகைகளுக்கு 59-62 சதவிகிதமும் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் எலைட் கடைகளில் மதுபானங்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவானது அனைத்து மதுவகைகளின் விலையையும் கடுமையாக உயர்த்தும். இதனால் கடுமையாக பாதிக்கப்படப்போவது அப்பாவிகள் மட்டுமே. 

1,190 ரூபாய் ரெட் லேபிள் சரக்கிலிருந்து 21,130 ரூபாய் ஜானி வாக்கர் ப்ளூ வரை இங்கு வெளிநாட்டு மதுபானங்கள் கிடைக்கின்றன. இதற்கிடைப்பட்ட விலைகளில் பிளாக் லேபிள், ஜாக் டேனியல், எமிசி கோல்ட், ரெனி மார்ட்டின் ஆட்டோ போன்ற மதுபான வகைகள் கிடைக்கின்றன. மன அமைதியை விரும்புவோர், தொழில் ரீதியான பாதிப்புகளை எதிர்கொள்வோர், ஐ.டி பணியாளர்கள் போன்றோர் இதுபோன்ற மதுவகைகளையே அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், இந்த மது பானங்களின் விலை அதிகமாகும். ஏற்கெனவே பல கஷ்டங்களை நினைத்து குடிப்பவர்களுக்கு இந்த விலையேற்றம் கூடுதல் கஷ்டத்தைக் கொடுக்கும். வெளிநாட்டு மது பானங்களுக்கு 12 சதவிகிதம் விலையேற்றத் தெரிந்த தமிழக அரசுக்கு... குடிப்பவர்களுக்கு அவரவர் கம்பெனிகளில் 12 சதவிகிதம் சம்பளத்தை உயர்த்தச் சொல்ல துணிச்சல் இருக்கிறதா? ஒரு மாதத்தில் நான்கு முறை ஒருவன் குடித்தால், வாங்கும் சம்பளத்தில் 70 சதவிகிதம் போய்விடுகிறது. இந்த விலையேற்றத்தால் இனி மொத்த சம்பளமும் போய்விடும். அப்புறம் குடிப்பவர்கள் எப்படிக் குடும்பம் நடத்துவார்கள்? தமிழக அரசு இதைத் தீவிரமாக சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் இதையே தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறது!'' என்றார் அக்கறையுடன்.


டிரெண்டிங் @ விகடன்