வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (28/06/2018)

கடைசி தொடர்பு:16:37 (29/06/2018)

கடனில் இருக்கிறதா காடுவெட்டி குரு குடும்பம்?

காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடனில் சிக்கித்தவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

காடுவெட்டி குரு

பா.ம.க-வில் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்துவந்தவர், முன்னாள் எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு. இரண்டு மாத காலமாக உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தவர், கடந்த மாதம் 25-ம் தேதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயங்கொண்டான் அருகில் உள்ள காடுவெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காடுவெட்டி குருவின் மறைவால் பா.ம.க தொண்டர்களும், அவரது குடும்பத்தினரும்  வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடனில் சிக்கித்தவிப்பதாகவும், இதனால் அவரது டெம்போ வேனை விற்க முடிவுசெய்துள்ளதாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், ``கடன் சுமை காரணமாக எங்கள் மாமாவின் (ஜெ.குரு) டெம்போ வேனை விற்பனைசெய்ய குடும்பத்தில் முடிவு எடுத்துள்ளோம். வீட்டுக் கடன் 19 லட்சம் ரூபாய் மற்றும் வாகனக் கடன் 7 லட்சம் ரூபாய் இருப்பதாலும், வங்கியில் கடனை திருப்பிச் செலுத்த குறுகிய கால அவகாசமே இருப்பதாலும், வேறு வழியின்றி விற்க முடிவெடுத்துவிட்டோம்" என்று பதிவிடப்பட்டிருந்தது. 

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக அவரின்- தங்கை மகன் சிவாவைத் தொடர்புகொண்டபோது, ``ஆம், எங்கள் மாமா குடும்பத்தினர் கடனில் தவிப்பது உண்மைதான்.  அதைத்தான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தோம். எனினும், இதுகுறித்து மேற்கொண்டு ஏதும் தற்போது கூற முடியாது. இன்னும் இரண்டு மூன்று நாளில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்போகிறோம். அதில், அனைத்து தகவல்களையும் தெளிவாகக் கூறுகிறோம்" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க