வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (15/03/2013)

கடைசி தொடர்பு:15:28 (15/03/2013)

புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் ஜெயலலிதா (படங்கள்)

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 7 புலிக்குட்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

சென்னையை அடுத்துள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், கரடி, வெள்ளைப்புலி, யானை, நீர்யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த உயிரியல் பூங்காவில், கலப்பு இனப்பெருக்கத்தில் 3 பெண் புலிக்குட்டிகள் பிறந்துள்ளன. இதேபோல 2 ஆண் மற்றும் 2 பெண் வெள்ளைப் புலிக்குட்டிகளும் பிறந்துள்ளன.

இந்தப் புலிகளுக்கு பெயர் சூட்டும் விழா வண்டலூர் உயிரியல் பூங்காயில் இன்று காலை 9.30 மணிக்கு நடந்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, 7 புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்.

 

4 வெள்ளைப்புலி குட்டிகளுக்கு அர்ஜுனா, காவேரி, சித்ரா, ஆர்திரேயா என்று ஜெயலலிதா பெயர் சூட்டினார். மற்ற 3 புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, சித்தா என்று பெயர் வைத்து ஜெயலலிதா மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து வனத்துறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்துவைத்தார்.

புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்வுக்குப் பிறகு, பூங்காவில் உள்ள யானைகள், நீர் யானைகள் உள்ள இருப்பிடத்திற்கு நேரடியாகச் சென்ற ஜெயலலிதா, அங்குள்ள விலங்குகள் பராமரிக்கப்படுவது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

படங்கள்: குமரேசன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்