வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (29/06/2018)

கடைசி தொடர்பு:07:30 (29/06/2018)

குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்; காத்துவாங்கும் கச்சநத்தம் பள்ளிக்கூடம்!

   

கச்சநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. உயிருக்குப் பயந்தும் பாதுகாப்பு கருதியும் தங்களது பிள்ளைகளை வெளியூர் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் சாதிவெறியர்களால் கடந்த மாதம் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். கச்சநத்தத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்து படித்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் படுகொலைக்குப் பிறகு திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு, மாரநாடு, கச்சநத்தம் கிராமங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தொடக்கப்பள்ளி கச்சநத்தம் கிராமத்தில் இருப்பதால் இக்கிராமத்தைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கச்சநத்தம் இன்னும் சில ஊர்களிலிருந்து படிக்க வந்துகொண்டிருந்தார்கள். இந்தாண்டு 18 மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆதிக்கசாதியினர் தங்கள் பிள்ளைகளை இந்த ஊர் பள்ளிக்கு அனுப்பவில்லை. அதே நேரத்தில் கச்சநத்தம் கிராமத்தில் உள்ளவர்களும் பாதுகாப்பு கருதி இனி இந்த ஊரில் வாழ முடியாது என்று கருதி நகர்ப்புறங்களில் உள்ள பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்த்துவிட்டார்கள். தற்போது இந்தத் தொடக்கப்பள்ளி போலீஸார் தங்கியிருக்கும் இடமாக மாறியிருக்கிறது. இரண்டு ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்து மாணவர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க