வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:07:06 (29/06/2018)

``மருது சகோதரர்களுக்கு சுவர் போல எனக்கு ட்விட்டர்” வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் கமலின் பதில்கள்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது முதல், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். திரைப்படங்கள், பிக் பாஸ் எனச்  சென்றாலும், அவ்வப்போது மக்களைச் சந்தித்தும் வருகிறார். கடந்த வாரம் டெல்லி சென்றிருந்த கமல், தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியைப்  பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலையில் கமல் தனது ட்விட்டர்  பக்கத்தில், ``ட்விட்டரில் நேரடியாக உங்களின் கேள்விகளுக்கு விடையளிக்க உள்ளேன். கேள்வி கேட்கிறவர்கள், #AskKamalhaasan என்ற ஹேஷ்டேக் மூலம் தங்களது கேள்வியைக்  கேட்கலாம்” எனப் பதிவிட்டிருந்தார் .

கமல்ஹாசன் ட்விட்டர்

அதன்படி நேற்று மாலை ட்விட்டரில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். ட்விட்டரில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளைத்  தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கமலிடம் கேட்க அதற்கு கமல் பதிலளித்தார். 

முதல் கேள்வியாக ட்விட்டர் குறித்தும், அதில் வலம் வரும் இளம் தலைமுறையினருக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என கேட்க, “குறிப்பிட்ட வயது வரை நான் அறிவுரைகளை ஏற்பவனாக இல்லை. அதனால் அறிவுரைகளை நான் வழங்குவது சரியானதாக இருக்குமா என்பதும் தெரியவில்லை. செய்யக்கூடாது என யாராவது சொன்னால் அதைத்தான் செய்யத் தோன்றும். எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் காலம் எல்லோருக்கும் வரும்” என்றார்.

கமல்ஹாசன் - டிடி

முகம் தெரியாத ஊடகமாக இந்த ட்விட்டர் உள்ளது, அதனை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அது மொட்டை மாடியிலிருந்து சாலையில் செல்பவர்கள் மீது எச்சில் துப்பி விளையாடுவதுபோலதான். யார் என்று பார்த்தால் முகம் தெரியாது, மறைந்து கொள்வார்கள். இது வீரமும் கிடையாது. கெட்டிக்காரத்தனமும் கிடையாது” என்றார். 

எந்த நேரத்தில் நீங்கள் ட்விட்டரில் இணையலாம் என முடிவெடுத்தீர்கள் என்ற டிடி-யின் கேள்விக்குப் பதிலளித்த கமல், “முதலில் ட்விட்டர் என்ற ஒன்று வந்துள்ளதாக கேள்விப்பட்டேன். அமெரிக்க அதிபர் ஒபாமா இதில் இருக்கிறார். அவரிடம் பேசலாம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், எனக்கு முதலில் ஈடுபாடு இல்லை. எல்லோருக்கும் பிடித்ததை வீம்புக்குப் பிடிக்காது என சொல்லமாட்டேன். எனக்குப் பிடிக்கவில்லை. அவ்ளோதான். ஆனால் பின்னர், மருது சகோதரர்களுக்கு சுவர் கிடைத்ததுபோல் எனக்கு ட்விட்டர் கிடைத்தது. வீரமும் விவேகமும் மட்டும் போதாது. மக்களிடம் சொல்ல வேண்டும் என்கிறபோது எந்த ஊடகத்தையும் பயன்படுத்தத் தயாராகினேன். மருது சகோதரர்களின் முதல் அரசியல் அந்தச் சுவரில் எழுதியதுதான். அந்த மாதிரி எனக்கு ட்விட்டர். காரணம் என்னால் என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை எங்காவது சொல்ல வேண்டும். அதுதான் ட்விட்டர். ட்விட்டர் எனக்குப் பொழுதுபோக்கு இல்லை” என்றார். 

கமல்ஹாசன்

ட்விட்டரில் யார் வேண்டுமென்றாலும் கேள்வி கேட்கலாம் என்கிற போதும், எப்படிச் சமாளிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு கமல் ,”சிலர் கேள்வியை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே கேட்பார்கள். அதற்குப் பதில் சொல்ல  வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்குப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்றார். 

நீங்கள் உங்களில் நீண்ட சினிமா பயணத்தில் இருந்து விலகி அரசியலுக்குள் நுழைந்திருக்கிறீர்கள்? உங்களின் இந்தப் பெரிய மாற்றத்துக்கு எதை இன்ஸ்பிரேஷனாக சொல்வீர்கள் என்ற கேள்விக்கு, ``எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் ஒருவர். அவரை வழக்கறிஞர் ஆக்க அவரின் தந்தை நிறைய செலவு செய்தார். அவரும் வழக்கறிஞர்  ஆகிவிட்டார். ஆனால், கொஞ்ச காலம்தான் அந்தப் பணியைச் செய்தார். பின்னர் மக்களுக்காக அவர் போராட்டத்தில் இறங்கிவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை. காந்திதான் அந்த இன்ஸ்பிரேஷன்” என்றார். 

சக நண்பர்களின் திரைப்பட டிரெய்லர்களை ட்விட்டரில் பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு, ``டிரெய்லர்கள் பார்ப்போம். அது கொஞ்சம் சுயநலமானதுதான். குறிப்பாக நாங்கள் எங்கள் படத்துக்கு டிரெய்லர் எடிட் செய்ய வேண்டும் என்கிறபோது நிறையப் படங்களின் டிரெய்லர்களைப் பார்ப்போம். பல நேரங்களில் நண்பர்கள் வந்து காண்பிப்பார்கள். எங்கள் படத்தின் டிரெய்லர் என்று. அதெல்லாம் பார்ப்பேன். அதில் நிறைய எனக்குப் பிடிக்கும்” என்றார்.

இறுதியாக, இந்த ட்விட்டர் எடிசன் காலத்திலும், காந்தி காலத்திலும் இல்லாதது. நம்மிடம் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என முடித்துக்கொண்டார்.