பட்ஜெட் கூட்டத்தொடர் எதிரொலி; புதுச்சேரியில் போராட்டம் நடத்தத் தடை

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதையொட்டி 20 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பட்ஜெட்

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என்றும் அன்றைய தினமே நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் நாராயணசாமி 2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்றும் புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் அறிவித்திருந்தார். அபூர்வா குப்தாஅதையொட்டி ஜூலை 2-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை கிழக்கு காவல் சரகத்துக்குப்பட்டப் பகுதிகளில் ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது என சட்டம் ஒழுங்குப் பிரிவின் சீனியர் எஸ்.பி அபூர்வா குப்தா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் கிழக்கு காவல் சரகத்துக்குட்பட்ட காவல் நிலையப் பகுதிகளில் வரும் 2-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எந்த ஒரு நபரோ அல்லது குழுவாக கூடவோ, ஊர்வலமோ, பொதுக்கூட்டமோ நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலமோ, போராட்டமோ நடத்த விரும்புபவர்கள் அதற்கான நிபந்தனைகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவு திருமணம், மத விழாக்கள், இறுதிச் சடங்கு ஊர்வலம் மற்றும் அரசு விழாக்களுக்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!