வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (29/06/2018)

கடைசி தொடர்பு:10:53 (29/06/2018)

`தலைவர் பதவியில் நீடிப்பாரா தமிழிசை?!' - முரளிதர ராவ் விளக்கம்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழிசை

தமிழகத்தின் பா.ஜ.க மாநிலத் தலைவராக இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து, மீண்டும் ஆட்சியைத் தொடர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. அதன்படி, தலைவர் பொறுப்பில் இருந்து  தமிழிசை சௌந்தரராஜனை, அமித் ஷா நீக்கிவிட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. `இந்தச் செய்தி உண்மையில்லை, தவறான செய்தி' என தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதர ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

முரளிதர ராவ்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், `நான் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையை அமித் ஷா மாற்றியதாக வெளியான தகவல் உண்மையில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது. தமிழக பா.ஜ.க தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் நீடிப்பார்' என விளக்கம் கொடுத்துள்ளார்.