தினகரனைக் குறிவைக்கும் திவாகரன் - ஆர்.கே.நகரில் களம்காணும் மன்னார்குடி  | Divakaran's next move towards RK Nagar

வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (29/06/2018)

கடைசி தொடர்பு:11:51 (29/06/2018)

தினகரனைக் குறிவைக்கும் திவாகரன் - ஆர்.கே.நகரில் களம்காணும் மன்னார்குடி 

திவாகரன்

வருகிற 4-ம் தேதி சென்னை ஆர்.கே.நகரில் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக மனிதச் சங்கலிப் போராட்டத்தில் ஈடுபட திவாகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளில் அண்ணா திராவிடர் கழகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அ.தி.மு.க. செயல்பட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து ஓரம்கட்டியது. தற்போது, எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் நடத்திவருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, தினகரன் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு குடைச்சல் கொடுத்தார். இந்தச் சூழ்நிலையில் தினகரனின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த திவாகரன், சமீபத்தில் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான திவாகரன், நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சமீபத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். தொடர்ந்து தினகரனுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை ஆர்.கே.நகரில் மாபெரும் மனிதச் சங்கலி போராட்டத்தை நடத்த அண்ணா திராவிட கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகளில் அக்கட்சியினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர். 

இதுகுறித்து அண்ணா திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ``எங்களின் அரசியல் எதிரி தினகரன். அவருக்கு எதிராகவே எங்களின் அரசியல் பயணம் இருக்கும். ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர்  தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. தினகரன், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டுவருகின்றனர். மேலும், இந்தத் தொகுதி மக்களுக்கு ஐ.ஓ.சி எண்ணெய் குழாய் பிரச்னை நீண்டகாலமாக இருந்துவருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 4-ம் தேதி மனிதச் சங்கலிப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகளில் கட்சியினர் ஈடுபட்டுவருகிறோம். இந்தப் போராட்டத்தின் மூலம் எங்களின் பலத்தை நிரூபிப்போம்" என்றனர். 

தினகரனை குறிவைத்துதான் ஆர்.கே.நகரில் மனிதச் சங்கிலி போராட்டத்தை நடத்த திவாகரன் திட்டமிட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்தும் மறைமுக உதவிகளைச் செய்ய வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாம். குறிப்பாக போலீஸ் அனுமதி திவாகரனுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்படவுள்ளதாம்.