வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (29/06/2018)

கடைசி தொடர்பு:18:16 (29/06/2018)

போலீஸாரின் `மெகா' ரத்ததான முகாம்... அனைத்தையும் சேமிக்கும் வசதி இருக்கிறதா?

தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களில் 13 பேர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மரணப் பதற்றம் குறைவதற்குள், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை, அரசு நிறைவேற்றும் விவகாரத்தில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

போலீஸாரின் `மெகா' ரத்ததான முகாம்... அனைத்தையும் சேமிக்கும் வசதி இருக்கிறதா?

மாபெரும் ரத்ததான முகாமை மிழ்நாடு போலீஸ் சார்பில் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாகச் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கையில்,

``தமிழ்நாடு காவல் துறையினர் இன்று ரத்த தானம் அளிக்கவுள்ளனர். முகாமில் பங்கேற்று 20 ஆயிரம் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து தானம் செய்யவுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. அதே அறிக்கையில், ``தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 8 லட்சம் யூனிட்ஸ் ரத்தம் தேவையாய் உள்ளது. மே மாதத்தில் கல்லூரி விடுமுறை மற்றும் கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதால், ஜூன் மாதத்தில் அதிக ரத்தம் தேவைப்படும். சராசரியாக ஒரு மாதத்துக்கு 35 ஆயிரம் யூனிட்ஸ் வரையிலான ரத்தம் தேவைப்படுவதால், காவல் துறை ரத்ததான முகாமில் வழங்கப்படும் 20 ஆயிரம் யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை'' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், ``ஒரேநாளில் இவ்வளவு பேர் அளிக்கும் ரத்ததானம், யாருக்கும் பலன் அளிக்கப்போவதில்லை. அது வீண் விரயம்தான்'' என்ற எச்சரிக்கையை வேண்டுகோளாக வைத்திருக்கிறார். மேலும் அவர், ``தமிழகம் முழுவதும் உள்ள போலீஸார், இன்று ரத்ததானம் முகாம் நடத்தி, ஒரேநாளில் ஆயிரக்கணக்கானோர் ரத்ததானம் அளிக்கும் நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதற்காக 40 வயதுக்குப்பட்ட போலீஸார் அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. 

இந்த அளவுக்குப் பெறப்படும் ரத்தத்தைச் சேமிக்கும் வசதி தமிழக அரசு மருத்துவமனைகளில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருசில நாள்களில் அவ்வளவு ரத்தம் நோயாளிகளுக்கு அவசியப்படுமா... அதைப் பயன்படுத்த முடியுமா என்பதும் கேள்விக்குறி? ஏதோ ஒரு நோக்கத்துக்காகப் போலீஸாரைக் கட்டாயப்படுத்தி, ஒரேநாளில் ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தம் பெறுவது சரியல்ல... அப்படிப் பெறுகின்ற ரத்தம் விரயமாகவே வழிவகுக்கும். தமிழ்நாடு காவல் துறையினர், இந்தத் திட்டத்தை உடனே கைவிட்டு, தேவைப்படும்போது மட்டும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் ரத்தத்தை வழங்கும் வகையில், அறிவார்ந்த, பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும்" என்றார்.

  ரத்த தான முகாம்

இதுகுறித்து மருத்துவத் துறை வட்டாரம்,  ``தமிழகம் முழுவதும் போலீஸாரின் இந்த ரத்த தான முகாம்கள் நடைபெறவுள்ளன. சென்னையில் முதல்வர் பழனிசாமி, முகாமைத் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு காவல் துறையில் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 50 சதவிகிதம் பேர், முகாமில் பங்கேற்றாலும்கூட 75 ஆயிரம் பேரின் ரத்தம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 75 ஆயிரம் போலீஸார் மூலம், 70 ஆயிரம் யூனிட் ரத்தம் ஒரேநேரத்தில் அப்போது கிடைக்கக்கூடும். தானமாகப் பெறப்படும் ரத்தத்தைச் சேமித்துவைத்து, அதை 35 நாள்களுக்குள் பயனாளிகளுக்குப் பயன்படும் வகையில் செலுத்திவிட வேண்டும். சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என ரத்தத்தை அப்போது வகைப்படுத்திப் பிரித்து வைக்கப்படும். சிவப்பணுக்களை 42 நாள்களுக்குள்ளும், தட்டணுக்களை 5 நாள்களுக்குள்ளும் பயன்படுத்த வேண்டும். `பிளாஸ்மா'வை மட்டும் ஓர் ஆண்டுவரை பாதுகாத்து வைத்துப் பயன்படுத்தலாம். இப்படி ரத்தத்தைச் சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா என்று வகைப்படுத்திப் பிரிக்கும் வசதி சென்னை அரசுப் பொது மருத்துவமனை, சில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தானமாகப் பெறப்படும் ரத்தம், அப்படியேதான் 35 நாள்களுக்குள் தேவையானவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிற நிலை இருக்கிறது" என்றனர் மிகத் தெளிவாக.

        ரத்ததானம் அளிக்கும் போலீஸார்

ரத்ததான முகாமில் பங்கேற்ற தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ``போலீஸார் அளித்துள்ள இந்த ரத்தம், ஒரு சொட்டுகூட வீணாக வாய்ப்பு இல்லை. 89 ரத்தச் சேமிப்பு வங்கிகள் நம்மிடம் இருப்பதால், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அச்சம் தேவையற்றது. இன்று பெறப்படும் ரத்தம் அனைத்தும் அரசு மருத்துவமனைக்கே அளிக்கப்படும்" என்றார். 

ரத்த தான முகாம்

தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களில் 13 பேர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த மரணப் பதற்றம் குறைவதற்குள், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை, அரசு நிறைவேற்றும் விவகாரத்தில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே போலீஸாருடன் பொதுமக்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடிகளை ஏற்றி எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டியும், மறியலில் ஈடுபட்டும் வருகின்றனர். விவசாயி ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மொத்தத்தில் நாளும் ஒரு மக்கள் போராட்டமும், போராட்டத்தை முறியடிக்க போலீஸார் பொதுமக்கள்மீது பாய்வதுமாக இருக்கும் நிலை காணப்படுகிறது. இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில்தான், அப்பதற்றத்தைத் தணிக்கும் விதமாக போலீஸாரின் ரத்ததான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வலுவாகி வருகிறது.