` அ.தி.மு.க-வுக்கு மவுசு இல்லை.. ஆனால், ஐந்தாயிரத்துக்கு வொர்த்!’ - தங்க தமிழ்ச்செல்வன் லாஜிக்

' அம்மாவும் (ஜெ.அணி) ஜானகி அணியும் சேர்ந்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதைவிடவா எடப்பாடி எங்களோடு இணைவதை விமர்சனம் செய்துவிடப் போகிறார்கள்' என்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.

` அ.தி.மு.க-வுக்கு மவுசு இல்லை.. ஆனால், ஐந்தாயிரத்துக்கு வொர்த்!’ - தங்க தமிழ்ச்செல்வன் லாஜிக்

லைமை நீதிபதியை விமர்சித்தது குறித்து விளக்கமளிக்குமாறு தங்க தமிழ்ச்செல்வனுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண். 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக பேட்டி கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஏன் அவதூறு வழக்கு தொடரப்படவில்லை' எனக் கேள்வி எழுப்புகிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், `பணம் பெற்றுத் தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும் தலைமை நீதிபதியையும் விமர்சித்தது குறித்து நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'இதுதொடர்பான விளக்கத்தில் திருப்தி இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடர அரசு வழக்கறிஞர் பரிந்துரைப்பார்' என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தங்க தமிழ்ச்செல்வன் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஸ்ரீமதி என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அட்வகேட் ஜெனரல் இந்தச் சம்மனை அனுப்பியிருக்கிறார். 

தங்க.தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

`` சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பத்திரிகையில் செய்தி படித்தேன். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து, என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்துள்ளனர். அந்தப் பெண்மணியை நான் பாராட்டுகிறேன். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சக நீதிபதிகள் நான்கு பேர் நேரடியாக குற்றம் சாட்டிப் பேட்டி அளித்தனர். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது. இந்தப் பேட்டியை அடிப்படையாக வைத்து, அந்த நான்கு பேர் மீதும் இந்தப் பெண்மணி ஏன் வழக்குத் தொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் வக்கீல் பதவி போய்விடும் என்ற பயமா..? நான் சாதாரணமானவன் என்பதால் என் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறாரா..? இந்தக் கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்". 

``தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக, இன்னும் உறுதியான முடிவை நீங்கள் அறிவிக்கவில்லை. என்ன செய்யப் போகிறீர்கள்?'' 

"மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரைச் சந்தித்து மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன்". 

எடப்பாடி பழனிசாமி`` `இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், என்னுடைய வேட்புமனுவை நிராகரித்துவிடுவார்கள்' எனவும் கருத்து சொல்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? 

`` அரசியல்ரீதியாக அவர்கள் என்னைப் பழிவாங்குவார்கள். அதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 'எடப்பாடி பழனிசாமி வேண்டாம்' என்று சொல்லித்தான் இந்தப் பக்கம் வந்தோம். சொல்லப் போனால், எங்கள் பக்கம் வருவது அவர்களுக்குத்தான் நல்லது. அம்மாவும் (ஜெ.அணி) ஜானகி அணியும் சேர்ந்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதைவிடவா எடப்பாடி எங்களோடு இணைவதை விமர்சனம் செய்துவிடப் போகிறார்கள். இரண்டு பேரும் ஒன்றாக இருந்து இரட்டை இலை இருந்தால் அனைவருக்கும் பலம்தானே..." 

``இரட்டை இலைக்கு மவுசு இல்லை என சில நாள்களுக்கு முன்புதானே நீங்கள் பேசினீர்கள்?'' 

`` ஆமாம். அ.தி.மு.கவுக்கு இப்போது மவுசு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தொகுதிக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் வாக்குகளை அவர்கள் பிரித்துவிடுவார்கள். அது சமயங்களில் வெற்றி-தோல்வியையே தீர்மானிக்கும். அந்த வாக்குகள் மதிப்பு வாய்ந்தவைதான். அதனால், அனைவரும் ஒன்றிணைந்தால் பெருவாரியாக வெற்றி பெறலாம். எங்கள் பக்கம் வந்தால் எடப்பாடிக்குத்தான் பலம்!" 

``சிறையில் சசிகலாவைச் சந்திப்பதற்கு நீங்கள் சென்றும் அனுமதி கிடைக்காததற்கு என்ன காரணம்?'' 

``நான் தனிப்பட்ட வேலைகளுக்காக பெங்களூரு சென்றிருந்தேன். சிறைத்துறையில் அப்பாயின்மென்ட் கிடைத்தால்தான் போக முடியும். இந்த வாரத்தில் சின்னம்மாவை சந்திக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்".

Do you like the story?

Please Appreciate the Author by clapping!