வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (29/06/2018)

கடைசி தொடர்பு:14:07 (29/06/2018)

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு தீ வைத்தது யார்? அதிர்ச்சித் தகவல்

ஜெயலலிதா பங்களாவில் தீ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பத்து மணி நேரத்துக்கு மேல் எரிந்த தீயால் அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பீதியடைந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுத்த பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இங்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் சிறுதாவூர் பங்களா அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. காய்ந்த புல்வெளியில் பரவிய தீ, 10 ஏக்கருக்கு மேல் உள்ள நிலப்பரப்பில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளித்தது. 

தீயை அணைக்க சிறுசேரி,  திருக்கழுக்குன்றம் மற்றும் மறைமலை நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. விடிய, விடிய தீயை அணைக்கும் பணிகள் நடந்தன. அதிகாலை 5 மணியளவில் தீயை வீரர்கள் கட்டுப்படுத்தினர். இந்தத் தீ விபத்தால், பங்களாவுக்கு எந்தவித சேதம் இல்லை என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

 ஜெயலலிதா பங்களாவில் தீ

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், ``வெயில் காலம் என்பதால் பங்களாவைச் சுற்றி இருக்கும் நிலப்பரப்பில் உள்ள காய்ந்த புல்லில் தீ பரவியுள்ளது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. இதனால் தீயை எங்களால் உடனடியாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. விடிய விடிய போராடி 10 மணி நேரத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். பங்களாவைச் சுற்றியுள்ள தோப்புகளில் மூன்று புறமும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.  இதனால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் சவுக்குத் தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது" என்றனர். 

அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சிறுதாவூர் பங்களா சசிகலா, இளவரசி உட்பட மூன்று பேரின் பெயர்களில் உள்ளது. மொத்தம் 64 ஏக்கரில் இந்தப் பங்களா அமைந்துள்ளது. பங்களா வீட்டைத் தவிர மற்ற இடங்களில் விவசாயம் நடந்துவருகிறது. தர்பூசணி, பூக்கள், சவுக்குத் தோப்பு ஆகியவை பயிரிடப்படும். தர்பூசணி, மலர்களை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் பங்களாவைச் சுற்றி ஏராளமான போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இதனால் பங்களா பகுதியின் அருகில் கூட யாரும் செல்ல முடியாது. ஆனால், தற்போது பெயருக்கு சில போலீஸார் மட்டும் உள்ளனர். மன்னார்குடி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் பங்களா இருக்கிறது" என்றனர். 

தொடர்ந்து பல மணி நேரம் எரிந்த தீயால், சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பண்டிதமேடு, சிறுதாவூர், ஆலத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் பீதியடைந்தனர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காய்ந்த புல்லில்தான் தீ பரவியுள்ளது என்று தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கு யார் காரணம் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, சமூக விரோதிகள் பங்களாவின் சுற்றுச்சுவரில் ஏறிக்குதித்து உள்ளே செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் யாராவது குடித்துவிட்டு சீகரெட் பற்ற வைத்ததால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்' என்றார்.