இன்று நண்டு... நாளை ஆமை... போராட்டத்தால் மிரட்டிய பெண்... அசராத ஜெயக்குமார் | Protest infront of Jayakumar house

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (29/06/2018)

கடைசி தொடர்பு:13:05 (29/06/2018)

இன்று நண்டு... நாளை ஆமை... போராட்டத்தால் மிரட்டிய பெண்... அசராத ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின்முன்பு நர்மதா நந்தக்குமார் என்ற பெண், நண்டு விடும் போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

நண்டுவிடும் போராட்டம்
 

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தின் முன் பச்சை தலைப்பாகை அணிந்து நண்டுவிடும் போராட்டம் நடத்தியுள்ளார் நர்மதா. போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, `எலி வலையானாலும் தனி வலை வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தின்போது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஓகி புயலின்போது மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். கேரளாவில் அடுத்த ஆண்டு இதுபோன்று புயல் தாக்கினால் மீனவர்கள் பாதிக்கப்படாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. அதுபோன்று தமிழகம் என்ன செய்திருக்கிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தினந்தோறும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது. மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அவர்களைச் சென்றடைகிறதா? வரும் டிசம்பர் மாதமும் புயல் தாக்கினால் மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? இந்த நண்டுகள்கூட பாதுகாப்பாக வாழ்கிறது. ஆனால், மீனவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதற்காகத்தான் இந்த நண்டுவிடும் போராட்டம். மீனவர்களுக்கு இதுவரை அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் அமைச்சர் வீட்டில் அடுத்தமுறை ஆமைவிடும் போராட்டம் நடத்துவேன்’ என்றார் ஆதங்கத்துடன்.

ஜெயக்குமார்
 

சட்டப்பேரவையில் இன்று இந்த நண்டுவிடும் போராட்டம் பற்றிய பேச்சு அடிப்பட்டது. அப்போது பேசிய ஜெயக்குமார், `என் வீட்டில் நண்டு விடும் போராட்டம் செய்கின்றனராம். நண்டுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.  சிங்கம், புலி, பூரான் உள்ளிட்ட எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் இங்கு வந்திருக்கேன்’ என்றார் காட்டமாக. 

அவரைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், `ஜெயக்குமார் 2002ல் வன அமைச்சராக இருந்தார். அப்போதுதான் சிங்கம், புலியை பார்த்திருப்பார்’ என்று நகைச்சுவையாகப் பேசினார். அவையில் சிரிப்பலை வெடித்தது. 

போராட்டம்

இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் வீடுமுன்பு நண்டுவிடும் போராட்டம் நடத்திய நர்மதாவை கைது செய்யக்கோரி அமைச்சரின் ஆதரவாளர்கள் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close