ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் | TN CM Edappadi Palanisamy replaying to M.K.Stalin questions about IG Pon Manickavel issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (29/06/2018)

கடைசி தொடர்பு:15:19 (29/06/2018)

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்

சிலைக் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பொன்.மாணிக்கவேலுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான விசாரணை அதிகாரியான பொன்.மாணிக்கவேல், ``கோயில் சிலைகளைப் பாதுகாத்து வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சிலைக் கடத்தல் தடுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் எனக்குத் தெரியாமலும், உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறாமலும் மாற்றப்படுகிறார்கள். சிலைக் கடத்தல் குறித்த எனது விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பொன்.மாணிக்கவேல் விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின், 'ஐ.ஜி. பொன்மாணிக்கவேலிடம் அனைத்து சிலை வழக்குகளையும் கொடுக்காதது ஏன்? அரசு உதவவில்லை என ஐஜி கூறியது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அனைத்து ஆட்சியிலும் நடைபெறும் ஒன்றுதான். அ.தி.மு.க ஆட்சியில்தான் சிலை திருடப்பட்டதுபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி கூறிவருகிறார். தி.மு.க ஆட்சியைவிட அ.தி.மு.க ஆட்சியில்தான் அதிகமான சிலைகள் மீட்கப்பட்டன. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கேட்டபடி அவருக்கு 320 அலுவலர்கள் ஒதுக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி பொன்.மாணிக்கவேல் கேட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. நானும் கடவுள் நம்பிக்கை உடையவன்தான். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுகுறித்து ஓரளவுக்குத்தான் பேசமுடியும்' என்று தெரிவித்தார்.