`செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?' - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

``செவ்வாய்க் கிரகத்தில் நீர், நிலம் மற்றும் சீதோஷ்ண நிலை உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றார் போல் உள்ளது. இதுகுறித்து தற்போது ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது" என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

                                          மயில்சாமி அண்ணாதுரை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அன்னை தெரசா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது அதன் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியப் பணியாகும். செயற்கை கோள்கள் மூலம் பூமியில் உள்ள கடல் வளம், வனவளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்கள் குறித்து கண்டறியப்படுகிறது. பேரிடர் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசு தற்போது டிஜிட்டல் மயமாகி வருவதால் அனைத்துக் கிராமங்களுக்கும் அதன் பயன்பாடு கிடைக்கும் வகையில் அதற்கான செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது.

நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் அனுப்பப்பட்டுள்ளது. சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா செயற்கைக் கோள் 2020-ல் அனுப்பப்படவுள்ளது. மாணவர்கள் செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தில் எவ்வாறு கலந்து கொள்ளலாம் என்பதும் குறித்தும் அதற்கான சந்தர்ப்பத்தையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறோம். இதனால் உலகத் தரம் வாய்ந்த பொறியாளர்களாக மாணவர்கள் உருவாக முடியும். விண்வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்யப்படுகிறது. செவ்வாய் மற்றும் நிலவு ஆகியவைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? மற்றும் உயிரினங்கள் வளரமுடிமா? பயிர் சாகுபடி செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

                                         அன்னை தெரசா பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி


நிலவைவிட செவ்வாயில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்புள்ளது. செவ்வாயில் நீர், நிலம் மற்றும் சீதோஷ்ண நிலை உயிரினங்கள் வாழ்வதற்கேற்றார் போல் உள்ளது. இதுகுறித்து தற்போது ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது" என்று கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!