108 வருடங்களுக்குப் பின்னர் நாங்குநேரி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 108 வருடங்களுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 108 வருடங்களுக்குப் பின்னர் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பெருமாளுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயில் விளங்குகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட எட்டு சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இந்தக் கோயில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இந்தத் திருத்தலத்துக்கு ஸ்ரீவரமங்கை, தோத்தாத்திரி என்ற பல பெயர்கள் இருக்கின்றன. நரசிம்மபுராணம், ஸ்கந்தபுராணம், பிரம்மபுராணம் போன்றவற்றில் இத்தலத்தின் பெருமைகள் பற்றி பாடப்பட்டுள்ளது. 

இந்தக் கோயிலின் கருவறையில், இறைவன் தோத்தாத்ரி நாதர் தனது இடது காலை மடித்த நிலையில் வலது காலை தொங்கவிட்டுத் தரையில் படும்படியாக வீற்றிருக்கிறார். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 வருடங்களுக்குப் பின்னர் இந்தக் கோயிலின் திருப்பணிகள் 18 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றன. பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

முன்னதாக கடந்த 23-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றன. இன்று அதிகாலையிலும் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கங்கை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர விமானங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டடு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இந்தக் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!