வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (29/06/2018)

கடைசி தொடர்பு:16:10 (29/06/2018)

`24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய தலைவர் நான்!’ - தகிக்கும் தமிழிசை

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ' தமிழிசை மாற்றப்பட்டதாக வெளியான தகவல் தவறு' என ட்வீட் செய்தார் முரளிதர் ராவ். 

தமிழிசை

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையிடம் பேசினோம். ``தமிழகத்தில் பா.ஜ.க பலம் பெற்று வருகிறது. எனவே, தலைவரை மாற்றும் எண்ணம் தலைமைக்குக் கிடையாது. நான்கு பேர் சொன்னார்கள் என்பதற்காகப் பா.ஜ.க தலைவர்கள் நீக்கப்பட மாட்டார்கள். காங்கிரஸ்போல் பா.ஜ.க இல்லை. மத்திய அமைச்சர்களுக்கு புராகிரஸ் ரிப்போர்ட் இருப்பதுபோல், மாநிலத் தலைவர்களுக்கும் புரோகிரஸ் ரிப்போர்ட் உண்டு. எனவே, ஒவ்வொரு மாநிலத் தலைவர்களின் செயல்பாடுகளையும் பா.ஜ.க தலைமை கண்காணித்து வருகிறது. தலைவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இதுவரைக்கும் என் மீது எந்தவொரு எதிர்மறையான கருத்தையும் தலைமை முன்வைக்கவில்லை. 

திராவிடக் கட்சிகள் பலம் நிறைந்த மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதனால், மக்களிடம் பா.ஜ.க-வை நிலைநாட்ட வலிமையாகவும் தீவிரமாகவும் வேலை செய்து வருகிறோம். 24 மணி நேரம் வேலை செய்யக்கூடிய திறமையான பெண் தலைவர் என்ற மரியாதையை என் மீது வைத்துள்ளது கட்சி மேலிடம். தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்ற நாள்களிலிருந்து தொடர்ந்து, எந்தத் தலைவருக்கும் இப்படியான சூழ்நிலை வந்ததில்லை. தொண்டர்கள் மத்தியில் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பும்போது, கட்சியின் வளர்ச்சி பாதிக்கும் என எதிர்க்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அப்படிச் செய்வதால், தமிழகத்தில் பா.ஜ.க வேர் ஊன்றுவதற்கான சூழல் அமையாது எனவும் நினைக்கிறார்கள். வலிமையான ஒரு பெண் தலைவர் உருவாவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. 

ஒரு படித்த டாக்டர், நன்கு பேசக்கூடிய திறமைசாலி ஆகிய தகுதிகள் இருக்கும் ஒரு தலைவரின் வளர்ச்சியை மீம்ஸ் போட்டுக் குறைக்க முயன்று வருகின்றனர். ஒருமுறை இரண்டு முறை வந்தால் பரவாயில்லை. ஆனால், தொடர்ந்து இதுபோன்று செய்கின்றனர். இதனால் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இன்னும் பலமாக என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். எனது கட்சிக்கு நன்றியுடையவளாகத் தொடர்ந்து பணியாற்றுவேன். இந்தச் சமயத்தில் முரளிதர் ராவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது வார்த்தைகள் இன்னும் உற்சாகத்துடன் கட்சிப் பணியாற்றும் ஊக்கத்தை அளித்துள்ளது' என்றார்.