'எங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்' - குழந்தை கடத்தல் வதந்தியால் எச்சரிக்கும் டிஎஸ்பி | dont create rumor for child kidnapping - melur dsp warning

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (29/06/2018)

'எங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்' - குழந்தை கடத்தல் வதந்தியால் எச்சரிக்கும் டிஎஸ்பி

மேலூர் டி.எஸ்.பி

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில், குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல்கள் வதந்தி என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 'இதுபோன்று வதந்தி பரப்புபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என மேலூர் டிஎஸ்பி., சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை கடத்தும் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் வந்தன. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர்  பீதியடைந்தனர். குழந்தை காணாமல் போய்விடும் என எண்ணி, சில பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக்கூட அனுப்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., சக்கரவர்த்தி தலைமையில், போலீஸார் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தீவிர விசாரணை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். இ.மலம்பட்டி, கருங்காலக்குடி, சருகுவலைப்பட்டி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டி.எஸ்.பி., நேரடியாகச் சென்று ஆய்வுசெய்தார். இதில், வெளிமாநில நபர்களால் குழந்தைகள் கடத்தப்படவில்லை எனத்  தெரியவந்தது.

இந்த வதந்திகுறித்து மேலூர் டி.எஸ்.பி.,  சக்கரவர்த்தி கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக  மேலூர் பகுதிகளில் குழந்தைகள்  கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில்,  இங்குள்ள பகுதிகளில் வெளிநபர்கள் யாரும் இல்லை. பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர். எனவே, இதுபோன்ற பொய்யான தகவல்களைப் பரப்பி, பொதுமக்களையும் போலீஸாரின் நேரத்தையும் வீணடிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஷை தெரியாத வெளிமாநில நபர்களைக் கண்டால், அவர்களை குழந்தை கடத்துபவர்கள் என எண்ணி, அடித்துத் துன்புறுத்தக் கூடாது. சந்தேகப்படும்படியான நபர்களாக இருந்தால், உடனே அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவர்களை ஒப்படைக்கலாம்’ என்றார்.