சென்னைக்கு 20 துணை மின்நிலையம் - தங்கமணி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்துக்கு, அடுத்த ஆண்டுக்குள் 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தங்கமணி

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. மானியக்கோரிக்கை விவாதம் தொடங்குவதற்கு முன்பு கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்தக் கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, `திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட பி.என்.சி மில் அருகாமையில் உள்ள துணை மின் நிலையக் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. குறைவான மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

பேரவை

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி,  `மின் தடை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சென்னை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டு 26 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில், மேலும் 20 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர, மின் அழுத்தம் குறைவாக உள்ள துணை மின் நிலையங்களில் 20 மின்னூட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன்மூலம், சென்னை மாவட்டத்தில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும். மேலும், சென்னை மாநகரில் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்களில் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்க இடம் தர மறுப்பதும் மின் அழுத்தம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஆய்வுசெய்துவருகிறோம்' என அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!