வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (29/06/2018)

'ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம்' - கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க வலுக்கும் எதிர்ப்பு!

`ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் கொள்ளிடம் ஆறு. இந்த ஆற்றில், எங்கள் உயிரே போனாலும் மணல் குவாரி அமைக்க விடமாட்டோம்' என நீராதார பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


அரியலூர் மாவட்டம் திருமானூரில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு மற்றும் அனைத்து அரசியல் கட்சி விவசாய சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். தனபால், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பதைத் தடுத்து நிறுத்த பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்துவது, கலெக்டரிடம் பொதுமக்கள் குடியுரிமைகளை ஒப்படைப்பது, அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனக் கூட்டங்கள்குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் நிரந்தர மணல் குவாரி அமைக்க முயன்றால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதுகுறித்து கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ராஜேந்திரன் கூறியதாவது, ``கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்துப் போராடிவருகிறோம். 8 மாவட்டங்களில் உள்ள சுமார் ஒரு கோடி மக்களின் நீராதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும் நடைபெறும் போராட்டம் இது. தமிழக அரசு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

அத்துடன், தொடர்ந்து 20 ஆண்டுகளாக மணல் குவாரி அமைத்து அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், போர்வெல் மூலம் நடைபெறும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கக் கூடாது. மணல் குவாரி அமைந்தால், குடிநீர் மட்டுமின்றி விவசாயமும் பாதிக்கப்படும். எனவே, கல்லணை முதல் கீழணை வரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன"  என்று அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில், விவசாய சங்கம் மட்டுமில்லாமல் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.