வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (29/06/2018)

கடைசி தொடர்பு:17:05 (29/06/2018)

`ஸ்டெர்லைட்டைத் தொடர்ந்து மதுரா கோட்ஸ்' - தமிழக அரசு திடீர் நடவடிக்கை!

நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் மதுரா கோட்ஸ் நூற்பாலை நிறுவனம், விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்திவருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த ஆலைக்கான மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் துண்டிக்க உத்தரவிட்டது. 

மதுரா கோட்ஸ் நூற்பாலை

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, தரைப்பகுதியில் தலைகாட்டும் இடம் பாபநாசம். நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில், மதுரா கோட்ஸ் நூற்பாலை செயல்பட்டுவருகிறது. 135 ஆண்டுகள் பழைமையான இந்த நூற்பாலையில், நேரடியாக 5,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆலையை நம்பி மறைமுகமாக 10,000-க்கும் அதிகமானோர் உள்ளனர். 

இங்கு தயாரிக்கப்படும் நூல் மற்றும் துணிகள், உள்நாடு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. தாமிரபரணி ஆறு முதன்முதலாக மாசடையும் இடம் இதுதான். மதுரா கோட்ஸ் ஆலையின் கழிவுகள் ஆற்றுக்குள் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்தது. அதனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த நிறுவனத்துக்கு சில விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட்டது. 

அதை ஏற்று, ஆலை நிர்வாகம் சார்பாக ஆலை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளேயே கழிவுகளை மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 10 சதவிகித கழிவு நீரைத் தவிர, மற்றவற்றை மறுசுழற்சி செய்து ஆலையிலேயே பயன்படுத்துவதாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சாயம் கலந்த கழிவு நீரை மறுசுழற்சி செய்வதில் அதிகாரிகளுக்குத் திருப்தி ஏற்படவில்லை. 

நூற்பாலை தகவல் பலகை

ஐயனார் குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதையும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனால், குறைபாடுகளைச் சரிசெய்யும் வரை ஆலையை இயக்க முடியாதபடி மின் இணைப்பைத் துண்டிக்க, மின்சார வாரியத்தைக் கேட்டுக்கொண்டனர். அதன்படி ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இருப்பினும், ஜெனரேட்டர் உதவியுடன் ஆலையை இயக்க நிர்வாகத்தினர் முயன்றனர். அதை அதிகாரிகள் அனுமதிக்காததால், ஆலையின் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் உடனடியாகப் பணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அதனால், தொழிலாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிற்சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு முன்பு அதன் மின் இணைப்பைத் தமிழக அரசு துண்டித்தது குறிப்பிடத்தக்கது.