ஸ்டெர்லைட் கலவரத்துக்கு யார் காரணம்?- மீனவர்கள் அதிர்ச்சிப் புகார் | The fishermen were accusing the authorities of the power-storm of protesters alligation by fishers

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (29/06/2018)

கடைசி தொடர்பு:19:20 (29/06/2018)

ஸ்டெர்லைட் கலவரத்துக்கு யார் காரணம்?- மீனவர்கள் அதிர்ச்சிப் புகார்

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான முற்றுகைப் போராட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வக்கீல்கள் வாஞ்சிநாதன் மற்றும் அரிராகவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டம் நடைபெற்றதாகவும், தங்களை மூளைச்சலவை செய்ததாகவும் மீனவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். 

மீனவர்கள்


மீனவ மக்களைத் தொடர்ந்து போலீஸார் அச்சுறுத்திவருவதால், எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து, மீனவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என மீனவர்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீனவர் ரீகன் என்பவர் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மார்ச் 24-ல் உயர் நீதிமன்ற அனுமதியுடன், தூத்துக்குடி மக்களால் கண்டனப் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது. அதற்கு, மதுரை உயர் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தரும் வக்கீல்களாக அரிராகவன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் செயல்பட்டார்கள்.  ஏறக்குறைய 2 லட்சம் மக்கள் கூடிய அந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில், மீனவ அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க மீனவ மக்களே அதிக அளவில் கலந்துகொண்டார்கள். அது, துளி அளவுகூட வன்முறை இல்லாத அறப்போராட்டமாகத்தான்  நடந்தது. அதன்பின், மக்கள் அதிகாரம் என்ற அமைப்பைச் சார்ந்த வக்கீல்கள் அரிராகவன் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் கிராமங்களில் ஊடுருவி, ஏப்ரல் 23-ல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு அளிக்கும் போராட்டம் அறிவித்து, மக்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று முன்னின்று மனு அளித்தார்கள். 

அதன்பின் கிராமப் பஞ்சாயத்து கூடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினால் போதும்; உடனே ஸ்டெர்லைட்டை மூடிவிடலாம் என்று பரப்புரைசெய்து,  ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, இளைஞர்களை மூளைச்சலவைசெய்து,  மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்க, போராட்டக் களங்களில் நேரடியாகப் பிரசாரம் செய்துவந்தனர். இந்த வக்கீல்கள், பொதுமக்கள் அமர்ந்திருந்த போராட்டக் களங்களில் நேரடியாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மனதில் எதிர் கருத்துக்களைப் பரப்பி, உணர்வுகளைத் தூண்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதே நமது ஒரே நோக்கம் என முழக்கமிட்டு ,காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என  வீர வசனம் பேசினார்கள். 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் நோக்கி புறப்படும் வரை பொதுமக்களோடு இருந்த இந்த திடீர் தலைவர்கள், 13 பேர் படுகொலை செய்யப்பட்டபோதும் அதன் பிறகும் எங்கே இருந்தார்கள்? இந்த திடீர் தலைவர்களில் ஒருவருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. தற்போது, இந்த இரண்டு வக்கீல்களும் தங்களைக் காத்துக்கொள்வதற்காக, உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர் என்றும், அவர்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் தவறான வாதங்களை முன்னெடுத்து வருவதாக அறிகிறோம். 

இது, மீனவ சமுதாய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, காவல்துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுவருகிறோம். தொடர்ந்து மீனவ மக்கள் மீது விசாரணை என்ற பெயரில்  நெருக்கடிகளைக் கொடுத்து அமைதியற்ற சூழலில் பய உணர்வுடனும் இருக்கிறோம். எனவே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு எங்களுக்கு சட்ட உதவிகள் செய்து, மீனவ சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அளித்திடவேண்டி கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் ராஜுவிடம் பேசினோம். "ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்கள் தோல்நோய், புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படுகிறது என தங்களது சொந்த அனுபவத்தில், அறிவின் அடிப்படையில்தான் ஆலையை மூட வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். 99 நாள் நடந்த போராட்டத்தில் ஒருநாள்கூட மக்களை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை. பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தவிர மற்ற கட்சியினர் மக்களைச் சந்தித்தும் போராட்டமும் நடத்தினார்கள்.

மக்களின் தன்னெழுச்சியான மே 22-ம் தேதி போராட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டது காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பும்தான். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த பிறகும், மக்களை அச்சுறுத்தியும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலும் தற்போது காவல்துறையினர்தான் மக்களை மிரட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது குற்றம்சாட்டி, இக்குற்றச்சாட்டை மக்கள் மூலம் கூற வைத்துள்ளனர். இது, முழுக்க முழுக்க காவல்துறையின் சதிதான். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க