காவிரி விவகாரம் - சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாக, தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி

நீண்ட இழுபறிக்குப் பின், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைத்தது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமித்தது. இதற்கு, கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இதன் காரணமாக, கர்நாடகம் தன் பிரதிநிதிகளை அறிவிக்காமலிருந்தது. மத்திய அரசு தானாக முன்வந்து, தற்காலிக பிரிதிநிதியை நியமித்ததையடுத்து, கர்நாடகத் தரப்பில் உறுப்பினர்குறித்து அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் வரும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன மாதிரியான கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.  கர்நாடகத் தரப்பில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர் கருத்துக்களைப் பதிவுசெய்ய உள்ளதாகத் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்வினையாற்றுவது குறித்தும் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் சார்பில் எடுத்துவைக்கப்பட உள்ள முக்கிய விவகாரங்கள்குறித்து, துறைச் செயலாளர்களுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!