வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (29/06/2018)

கடைசி தொடர்பு:21:45 (29/06/2018)

`நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை செல்ல தயார்’ - தங்க தமிழ்ச்செல்வன்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கவும் அதனால் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன் என அ.ம.மு.க-வின் தென்மண்டல பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

தங்கத் தமிழ்செல்வன்


ராமநாதபுரத்தில் அ.ம.மு.க-வில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், ``தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான தீர்ப்பு ஏற்கெனவே எதிர்பார்த்தது என்றே சொல்ல வேண்டும். தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றாலும் செல்லாது என்றாலும் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தெரிந்துதான் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பைத் தந்துள்ளனர். வாக்கை மாற்றிப்போட்டு வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்கில் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எங்களுக்குப் பாதகமாக வந்திருக்கிறது. இதிலிருந்து தெளிவாகும் விஷயம் என்னவெனில் மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையுமே தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்கின்றன என்பதாகும்.

பாண்டிச்சேரி மாநிலத்தில் பேரவைத் தலைவர் தீர்ப்புக்கு எதிர்ப்பாகவும் தமிழகத்தில் பேரவைத் தலைவர் தீர்ப்புக்கு ஆதரவாகம் தீர்ப்பு வந்திருப்பதை வைத்தே நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கணித்துவிட முடியும். எனவேதான் நீதிமன்றங்களை நான் நம்பத் தயாராக இல்லை. மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாக நான் நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியதாகப் பெண் வழக்கறிஞர் ஸ்ரீமதி என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவ்வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என் கைக்கு அந்த நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதற்காகச் சிறை செல்லவும் தயாராக இருக்கிறேன்.
 
தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் பாரபட்சமாக இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளில் திருப்தியில்லை என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராமீது சக நீதிபதிகள் 4 பேர் டெல்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். இந்த செய்தியானது அனைத்து ஊடகங்களிலும்கூட வெளியானது. தலைமை நீதிபதிமீது புகார் செய்த சக நீதிபதிகள் 4 பேர்மீது ஏன் இதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படவில்லை. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் சொல்படிதான் நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் செயல்படுகின்றன. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி சேர்ந்தால் அ.ம.மு.க.அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், மேலும் 6 மாத காலம் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால்தான் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'' என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ முருகன், அமைப்பு செயலாளர்கள் ஜி.முனியசாமி, சோமாத்தூர் சுப்பிரமணியன், வ.து.நடராஜன், மாநில மகளிரணி இணைச் செயலாளர் கவிதா சசிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.