சென்னையில் கள்ளநோட்டு வைத்திருந்த மத்திய அரசு ஊழியர் கைது! | Central government employee arrested in Chennai

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (29/06/2018)

கடைசி தொடர்பு:20:15 (29/06/2018)

சென்னையில் கள்ளநோட்டு வைத்திருந்த மத்திய அரசு ஊழியர் கைது!

சென்னையில், கள்ளநோட்டு வைந்திருந்ததாகக் கூறி மத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

காவல்துறை

சென்னை நீலாங்கரையில் உள்ள பல்கலைக்கழக நகரைச் சேர்ந்தவர் நாகசுப்ரமணியன். வருமானவரித்துறை ஆணையருக்கு உதவியாளராகப் பணியாற்றிய இவர், கடந்த 2009-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், இவரது உறவினர் ஆவின் பாலகத்தில் 50 ரூபாய் கொடுத்து பால் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த 50 ரூபாயில் சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இவரும் 100 ரூபாய் கொடுத்து பால் வாங்கியுள்ளார். இவர்கள் கொடுத்த பணம் கள்ளநோட்டா? என்று சந்தேகம் அடைந்த கடைக்காரர் நீலாங்கரை போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

கள்ளநோட்டு

இதையடுத்து, நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீஸார் நாகசுப்ரமணியனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடமிருந்த 2 லட்சத்து 240 ரூபாய் பணத்தை ஆய்வுசெய்தபோது, அதில் 10 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, டெல்லியிலிருந்த ஒருவரிடமிருந்து வாங்கியுள்ளதாக நாகசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கள்ளநோட்டு வைத்து மாற்ற முயற்சியா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதால், போலீஸாருக்கு இவர்மீது மேலும் சந்தேகம் வலுத்துள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் கள்ளநோட்டு வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.