`கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்' - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

”தமிழக சட்டசபை விவாதங்களைப் பார்க்கும்போது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவது தெளிவாகவே தெரிகிறது” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

பொன் ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு, மத்திய இணை அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மனோஜ் சின்ஹா ஆகியோர் தரிசனத்துக்காக வந்தனர். கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சத்ரு சம்ஹார பூஜை மற்றும் ஹோமத்தில் கலந்துகொண்ட பின், சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”ஸ்ரீரங்கம் ஆலயத்துக்குச் சென்ற தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினுக்கு, பெருமாளுக்கு சாற்றப்பட்ட மாலையும், அம்பாளுக்கு சாற்றப்பட்ட திருமஞ்சனமும் வழங்கப்பட்டன. அதை அவர் அவமானப்படுத்தியதைப் பற்றி தமிழகத்தின் எந்தக் கட்சியும் வாய்திறந்து பேசவில்லை.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயத்தின் தெய்வம் அவமானப்படுத்தப்பட்டதை குறைந்தபட்சம் சிறப்பு விவாதத்திற்காவது எடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற அவமானகரமான செயல்களை தமிழக அரசு பொறுத்துக்கொண்டு இருந்தால், ஆலயத்தின் நிர்வாகத்தில் அருகதையற்ற அரசாங்கமாக இது மாறிவிடும். ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மரியாதை செலுத்திய கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள்மீது நடவடிக்கை எடுக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். பரிகாரத்துக்காகச் சென்ற ஸ்டாலின், இன்று தெய்வத்துக்கு பரிகாரம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளார். சட்டசபையில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மிகப்பெரிய கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலை தொடர்வது தமிழ்நாட்டுக்கு நல்லதஅல்ல.

பல மாநிலங்களில், சாலைகள் அமைக்கும்போது நிலங்கள் கையகப்படுத்துவது  நடந்துள்ளது. வளர்ச்சியை விரும்பும் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையற்ற முறையில் எந்த நிலத்தையும் மத்திய அரசு கையகப்படுத்தாது. தங்கள் பகுதி சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு, அப்பகுதி மக்கள்தான்  நிலம் கொடுக்க வேண்டும். பிரச்னையை துாண்டுவதற்கு என்றே பலர் செயல்படுவது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு, திட்டத்தைப் பற்றியோ அதனால் வரக்கூடிய லாபத்தைப் பற்றியோ எதுவும் தெரியாது. இவ்வாறு வளர்ச்சிப் பணிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகப் போராடுகிறார்கள் இதற்கு, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவருகின்றன. டி.டி.வி. தினகரனின் நோக்கம் தீவிரவாதத்தை ஒழிப்பதோ அல்லது அ.தி.மு.க ஒழிப்பது என்பதோ அல்ல. அவரது நோக்கம் எல்லாம் அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்பது மட்டும்தான். வேறு எதைப் பற்றியும் அவருக்கு கவலை இல்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!