வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (29/06/2018)

கடைசி தொடர்பு:21:30 (29/06/2018)

கோபித்துக்கொண்டு வெளியேறிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி... சமாதானப்படுத்திய திருமாவளவன்!

திருப்பதியில் நடைபெற்றுவரும் வன்கொடுமை தடுப்புச்சட்ட மாநாட்டில் உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கோபித்துக்கொண்டு வெளியேறினார்.

வன்கொடுமை

திருப்பதியில் உள்ள மொகந்தி அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது விழா மேடைக்கு வருமாறு விழாக்குழுவினர் அவரை அழைத்தபோது அவர் வராமல் பிடிவாதம் பிடித்தார். விழாவுக்கு வந்த அவரை விழாக் குழுவினர் சிறப்பாக வரவேற்காதததால் அவர் கோபித்துக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பார்வையாளர் மாடத்திலேயே அமர்ந்திருந்த அவரை விழாக் குழுவினர் மேடைக்கு வருமாறு கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேடைக்கு அழைத்தும்கூட அவர் வரவில்லை.

திருமா

இதைதொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதி பாலகிருஷ்ணனிடம் விழாக்குழுவினர் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். இதற்கு ஒருபடி மேலேசென்று அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரை மேடைக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால்,  அவர் மேடைக்கு வராமல் அரங்கத்திலிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் அரங்கத்திலிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.