நெல்லை மாநகராட்சியில் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சோலார் வாகனங்கள் | new solar vehicles are kept unused in Nellai corporation

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (29/06/2018)

நெல்லை மாநகராட்சியில் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட சோலார் வாகனங்கள்

நெல்லை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணிக்காக சோலார் வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், அவற்றை பயன்படுத்தாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுவைத்துள்ளனர். வெயில், மழையில் கிடக்கும் அந்த வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. 

சோலார் வாகனங்கள்

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகரப் பகுதியில் 1.25 லட்சம் குடியிருப்புகள், 6,928 வணிக நிறுவனங்கள் உள்ளன. அத்துடன், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தினமும்  160 டன் குப்பை சேர்கிறது. அவற்றை ராமையன்பட்டியில் உள்ள குப்பைக் கிடங்குக்கு எடுத்துச்செல்லும் மாநகராட்சிப் பணியாளர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கிறார்கள். 

நெல்லை மாநகராட்சியில் குப்பைகளை அள்ளவும், சுத்தம்செய்யவும் சுமார் 700 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர். நெல்லை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பதற்காக 23 வாகனங்கள் உள்ளன. இவற்றில் பல வாகனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. அதனால், அவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வாங்க மாநகராட்சியில் முடிவுசெய்யப்பட்டு, நவீன முறையில் சோலார் மூலம் இயங்கும் 15 தானியங்கி வாகனங்கள் வாங்கப்பட்டன. 

சாதாரண 3 சக்கர வாகனம் போல் காட்சியளிக்கும் இந்த வாகனத்தின் மேல்பகுதியில் சோலார் வசதி இருப்பதால், அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு வாகனம் இயக்கப்படுகிறது. அத்துடன், குப்பையை அள்ளவும், குப்பைத் தொட்டியில் கொட்டவும் ஹைட்ராலிக் தானியங்கி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன வாகனம், தலா 1.75 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது. 

இந்த சோலார் தானியங்கி வாகனத்தில் 400 கிலோ எடையுள்ள குப்பைகளை எடுத்துச்செல்ல முடியும். சோலார் பேட்டரிமூலம் 80 கிலோ மீட்டர் தூரம் இயங்கக்கூடிய இந்த வாகனங்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்ட போதிலும், இன்னும் பயன்படுத்தாமல் மாநகராட்சி வளாகத்திலேயே காட்சிப் பொருளாக நிற்கின்றன. பராமரிப்பின்றிக் கிடப்பதால், பயன்படுத்துவதற்கு முன்பாகவே இவை வீணாகும் ஆபத்து உள்ளது. அதனால், இந்த வாகனங்களை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.