வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (29/06/2018)

கடைசி தொடர்பு:20:37 (29/06/2018)

15 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீர்! - வெள்ளலூர் குளத்தை சீர்படுத்திய இளைஞர்கள்

15 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீர்! - வெள்ளலூர் குளத்தை சீர்படுத்திய இளைஞர்கள்

ளைஞர்கள் ஒன்றிணைந்தால் என்ன செய்வார்கள்? கிரிக்கெட் விளையாடுவார்கள், சினிமா பார்ப்பார்கள், அரட்டையடிப்பார்கள். இப்படி இளைஞர்கள் குறித்து உங்களின் எண்ண ஓட்டம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், கோவையைச் சேர்ந்த இளைஞர் கூட்டம் ஒன்று, ஆக்கிரமிப்பாலும் குப்பைகளாலும் சிக்கித் தவித்த வெள்ளலூர் குளத்தில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வரவைத்திருக்கிறது.

கோவை மாநகராட்சியின் குப்பைக்கிடங்காக உள்ள வெள்ளலூர், ஒருகாலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கிராமம். தற்போதும் தமிழகத்தின் மிகப்பெரிய கிராமமாக விளங்குகிறது. ரோமானியர்களின் முக்கியமான வணிகப்பகுதி. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள ரோமானிய நாணயங்களில் 80 சதவிகிதம், வெள்ளலூரில்தான் கிடைத்துள்ளது. கரிகாலசோழனின் தாய்மாமன் இந்த ஊர்தான் என்றும், கரிகால் சோழன் இங்கு பிறந்ததாகவும் கூறப்படுகிறது. 

வெள்ளலூர்

99 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளலூர் குளத்துக்கு, சங்கிலிக்கருப்பன் அணைக்கட்டிலிருந்து பிரியும் நொய்யல் நீர், ராஜ வாய்க்கால் வழியாக 6.5 கி.மீ பயணம் செய்துவருகிறது. வெள்ளலூர் குளம் மூலம் 1,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் குளம் நிரம்பியிருந்த காலகட்டத்தில், வெள்ளலூரைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊர்களில், 50 அடிக்குள் நிலத்தடிநீர் கிடைத்தது. தற்போது, அது 1,000 அடியைத் தாண்டி அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. காரணம், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளாலும், அந்த மக்கள் போட்ட குப்பைகளாலும் வெள்ளலூர் குளம் நிரம்பியதுதான்.

ஒருகட்டத்தில், குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் மதகுகளையே இந்தக் குப்பைகள் அடைத்துவிட்டன. இதனால் ஒரு சொட்டு தண்ணீர்கூட வெள்ளலூர் குளத்துக்கு வரவில்லை. அந்தப் பகுதி விவசாயிகளும், சில நல்ல உள்ளங்களும் செய்த களப்பணியால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் எட்டிப்பார்த்தது. ஆனால், அது நீடிக்கவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இணைந்த இளைஞர் கூட்டத்தில் ஒரு பகுதியினர், கோவையில் சேதமடைந்து கிடக்கும் நீர்நிலைகளை மீட்கும் பணியில் இறங்கினர். வாரத்தின் 6 நாளும் சொந்த வேலைகளைச் செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் நீர்நிலைகளைச் சுத்தம்செய்யும் பணியில் இறங்கியது அந்த இளைஞர் படை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு குளத்தில் அட்டெண்டன்ஸ் போட்டுவிடுவார்கள். ஐ.டி முதல் வங்கி ஊழியர்கள் வரை இதில் ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் களப்பணி செய்துவருகின்றனர். அவர்கள் பெயர், `கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு'. 

``மதுபாட்டில்கள் தொடங்கி மனித மலம் வரை நிறைந்திருந்த வெள்ளலூர் குளத்தில் காலடி எடுத்து வைத்தனர். ஒருபுறம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட, மறுபுறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற, கூடவே சி.எம் செல் முதல் குடிசை மாற்று வாரியம் வரை தொடர்ந்து கதவைத் தட்டினர். இதன் பலனாக, கடந்த ஆண்டு வெள்ளலூர் குளத்தில் இருந்த பெருமளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும், வாய்க்காலையும் குளத்தையும் தூய்மை செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகமும் இந்த இளைஞர்களுக்குக் கைகொடுத்தது. இதனால், 15  ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளலூர் குளத்துக்குத் தண்ணீர் வந்துள்ளது.

வெள்ளலூர்

``நெல், கரும்பு, வெற்றிலை என வெள்ளலூர், பசுமை போத்திய பகுதி. இந்த மண்ணுக்கு அவ்வளவு சிறப்பம்சம் இருக்கிறது. அதற்குக் காரணம், இந்தக் குளம்தான். அப்படிப்பட்ட குளத்தை மீட்டெடுப்பதற்காகக் களப்பணியில் இறங்கினோம். நாங்கள் இந்தப் பணி செய்யும்போது, `அரசு, உங்களுக்கெல்லாம் செவி சாய்க்காது, உங்கள் உழைப்பு வீண்!' என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நாங்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தோம்.

அதன் பலனாக, மாநகராட்சி, பொதுப்பணித் துறை, குடிசை மாற்று வாரியம், வருவாய்த் துறை என அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைத்தது. இதனால்தான் இது சாத்தியமானது. வெள்ளலூரில் குப்பைக்கிடங்கு இருப்பதால், இங்கு காற்று மாசு அதிகம். இந்தக் குளத்துக்கு நீர் வருவதன் மூலம், இங்கு காற்று மாசும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. பருவமழை தீவிரமடைவதற்குள் வெள்ளலூர் குளம் முழுவதும் நீர் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறோம்.

நமது நீர்நிலைகள் யாவும், பிரிட்டிஷ் காலத்துக்குத் தகுந்ததுபோல் உள்ளன. தற்போது, பருவநிலை மாற்றம் அதிகரித்துவிட்டது. அதற்குத் தகுந்தாற்போல் வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். குளங்களைத் தூர்வாருவதைவிட வாய்க்காலையும் தடுப்பணைகளையும் தூர்வாருவதும் முக்கியம். இங்கு பெய்யும் மழையை சாக்கடையில் கலக்க விட்டுவிட்டு, நீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி வருகிறோம். உரிமையைக் கேட்பதற்கு முன்பு நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். கோவை உருவாகக் காரணமே நொய்யல்தான். இங்கு இருக்கும் நீர்நிலையெல்லாம், நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி உழைத்த கட்டமைப்புகள். நீர்நிலைகளுக்கும் மக்களுக்குமான தொடர்பை அரசு அதிகரிக்க வேண்டும். நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். 

நமது உடலில் 60 சதவிகிதம் நீர்தான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நீர் சுத்தமாக இருந்தால்தான், நமது உடலில் இருக்கும் நீரும் சுத்தமாக இருக்கும். மாறிவரும் பருவநிலைக்கேற்ப நீர்நிலைகளைக் காப்பதற்காக, நீர்நிலைகளுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்துதான், நீர்நிலைகளைச் சேதப்படுத்தியுள்ளோம். எனவே, அனைவரும் சேர்ந்துதான் அதை மீட்க வேண்டும்" என்கிறார், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்.

வெள்ளலூர்

``ஆரம்பத்தில், அங்கு இருந்த மனிதக் கழிவுகளால் பலரும் பணிபுரியத் தயங்கினர். முதலில் இரண்டு பேர் களமிறங்கினோம். பிறகு, அதுவே படிப்படியாக அதிகரித்தது. சமூக வலைதளம்தான் எங்களுக்கு மிகப்பெரிய பலம். எங்களுக்குத் தேவையான உதவிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, பலரும் தாமாக வந்து உதவுகின்றனர். எங்கள் பணியைப் பார்த்த அட்லாண்டா தமிழர்கள், இங்கு வந்து களப்பணி செய்தனர்.

அரசு என்றாலே மக்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள் என்ற கருத்து எங்கும் பரவியிருக்கிறது. நாம் தொடர்ந்து களப்பணி செய்தால், அரசாங்கமும் இறங்கி வந்து பணி செய்யும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். வெள்ளலூர் குளத்தை முன் மாதிரிக் குளமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். நீர்வழித்தடம், ஏரிக்கரை, ஏரியின் உள்பகுதி தொடங்கி வெள்ளலூர் குளத்தை தமிழகத்துக்கே முன்னுதாரணமாக மாற்ற முயன்றுவருகிறோம்.

பல்லுயிர் பெருக்கத்துக்காக ஏரிக்கரையில் மியா வாக்கி முறையில் மரங்களை நட்டு வைத்துள்ளோம். தற்போது வரை 100 வகைகளில் 2,000 மரங்களை நட்டுள்ளோம். 10 ஆயிரம் மரங்களை, இங்கு நடுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், பல்லுயிர் பெருகுவதுடன், ஏரிக்கரையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் தடுக்கலாம். வெள்ளலூர் பகுதியில் மீதம் இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் விரைவில் அகற்ற வேண்டும். அதேபோல நீர்நிலைகளைப் பராமரிக்க பொதுப்பணித் துறை வழங்கும் நிதியை அதிகப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் எங்களுடன் சேர்ந்து களப்பணி செய்ய வருவார்கள். சிலர் குடும்பத்துடன் களப்பணிக்கு வருவார்கள். குழந்தைகள் கரையில் விளையாட விட்டு, பெற்றோர் களப்பணி செய்வார்கள். சமயத்தில், குழந்தைகளும் களப்பணி செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எங்களுக்கு அழைப்பு வருகிறது. எங்களைப் பார்த்து, தற்போது அவர்களும் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று உற்சாகம் பொங்கக் கூறினார் இந்த அமைப்பின் தீவிர களப்பணியாளரான ராஜேஷ்.


டிரெண்டிங் @ விகடன்