வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (30/06/2018)

கடைசி தொடர்பு:00:30 (30/06/2018)

மதுரையில் ஒரே நாளில் 1,446 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்!

மதுரை விளாங்குடி அருகே உள்ள ஒரு தனியார் கடையில் போலீஸாரால் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 நபர்களை காவல்துறை கைது செய்தனர். எனினும் கடையின் உரிமையாளர் தப்பியோடினார்.

குட்கா பறிமுதல்

மதுரை விளாங்குடி பகுதியிலுள்ள தனியார் ஸ்டோர் ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக செல்லூர் போலீஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு கடையில் குட்கா விற்பனை செய்வது உறுதியானது. அதன் அடிப்படையில் மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது தெற்குவாசல் பகுதியிலுள்ள ஒரு குடோனிலிருந்து குட்கா சப்ளை செய்யப்பட்டு வந்த தகவல் கிடைத்தது. அங்கேயும் சென்று போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் பண்டல் பண்டலாக 1,446 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டன. அவையனைத்தையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெருமாள், சிவசக்தி, சக்கரவர்த்தி, இளங்கோவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். இதையறிந்த கடை உரிமையாளரான அருண் சக்ரவர்த்தி தப்பியோடினார். எனினும், அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்லூர் சரக காவல்துறை கடை உரிமையாளர் அருண் சக்கரவர்த்தியைத் தேடிவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க