`ஊதியத்துக்கு ஏற்ற வேலை' - அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்த ரப்பர் பணியாளர்கள் முடிவு! | rubber workers decide to conduct a protest against tn govt

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:10:21 (30/06/2018)

`ஊதியத்துக்கு ஏற்ற வேலை' - அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்த ரப்பர் பணியாளர்கள் முடிவு!

ன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகம் ஊதிய உயர்வு வழங்காததால், ஊதியத்துக்கு ஏற்ப வேலை என்ற போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவுசெய்துள்ளனர்.

ரப்பர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, சிற்றாறு, கோதையாறு, மணலோடை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. பல ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள ரப்பர் மரங்களில் பால் வெட்டுதல், பால் சேகரித்தல், தோட்டப் பராமரிப்பு எனப் பல்வேறு பணிகளுக்காக சுமார் 3,000 ஊழியர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், 15 மாதங்களாக அரசு இழுத்தடித்துவருகிறது. இதையடுத்து 'ஊதியத்துக்கு ஏற்ற வேலை' என்ற போராட்டத்தை விரைவில் நடத்த உள்ளதாக அரசு ரப்பர் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கீரிப்பாறைப் பகுதியைச் சேர்ந்த அரசு ரப்பர் கழக ஊழியர் முருகன் கூறுகையில், ``அரசு ரப்பர் தோட்டத்தில் ஒன்றரை வருடமாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

முருகன்

7 முறைக்கும் மேல் பேச்சுவார்த்தையும், 8-க்கும் மேற்பட்ட போராட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால், சம்பள உயர்வுகுறித்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அரசு எங்கள் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 'ஊதியத்துக்கு ஏற்ற வேலை' செய்வது என முடிவெடுத்துள்ளோம். அதன்படி, ரப்பர் மரங்களில் பால் வெட்டிவைத்துவிட்டுச் செல்வோம். ஆனால், பால் சேகரிக்கும் பணியைச் செய்யமாட்டோம். இனியாவது, ஊதிய உயர்வை வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.