`ஜனநாயக நாட்டில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடைபோடுவதா?' - தமிழ்மாந்தன் ஆவேசம்! | does we don't have right to make Commemoration? - Tamilmanthan!

வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (29/06/2018)

கடைசி தொடர்பு:10:19 (30/06/2018)

`ஜனநாயக நாட்டில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடைபோடுவதா?' - தமிழ்மாந்தன் ஆவேசம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினர் பல்வேறு நெருக்கடிகளைத் தருவதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தன் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ்மாந்தன்

 

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. ஆனால், அதை தூத்துக்குடியில் நடத்த போலீஸார் தடை ஏற்படுத்திவருகின்றனர். இதனால், நினைவேந்தல் நிகழ்ச்சி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. 

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாந்தனைத் தொடர்புகொண்டு பேசினோம்.  ``1996-ம் ஆண்டு `ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். இயக்கத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே தொடர்ச்சியாகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறோம். இந்நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் பங்கேற்றுப் போராடினோம். மக்களோடு மக்களாகச்சென்றுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டோம். அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து, அமர்ந்து போராடத் திட்டமிட்டோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக சிலர் தெரிவித்தனர். அப்போதுதான்,  காவல்துறையே வண்டிகளை தீவைத்து எரித்து, போராட்டத்தைத் திசைதிருப்ப முயன்றது எங்களுக்குத் தெரிந்தது. 

இதன் ஒருபகுதியாக, போராட்டத்தைக் கலைக்க காவலர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர். வன்முறை செய்யும் நோக்கில் நாங்கள் செல்லவில்லை. வெறும்கையுடன்தான் சென்றோம். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், காவல்துறையினரின் அழுத்தம் காரணமாக யாரும் எங்களுக்கு அரங்கம் தர முன்வரவில்லை. நாங்கள் நினைவேந்தல் கூட்டம் நடத்துவதை அவர்கள் தடுக்கப் பார்க்கிறார்கள். சில காவலர்கள் என் வீட்டுக்கு வந்து, பல்வேறு வகையில் நெருங்கடி தருகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். என்மீது வேண்டுமென்றே சில வழக்குகளை ஜோடித்துள்ளனர். சட்டத்துக்கு உட்பட்டுத்தான் அனைத்தையும் செய்துவருகிறோம். ஒரு ஜனநாயக நாட்டில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூட அனுமதியில்லையா? நாங்கள் நீதிமன்றத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டுள்ளோம். யார் தடுத்தாலும் நடத்தியே தீருவோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.


[X] Close

[X] Close