தியாகி ஓய்வூதியத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பி.எஸ்.பெரியய்யா (91). இவர், தமிழக அரசின் தியாகிகள் ஓய்வூதியம் பெற்றுவருகிறார். மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு பெரியய்யா மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இவரது மனுவை நிராகரித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவை ரத்துசெய்து மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக்கோரி பெரியய்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது, பெரியய்யா இறந்தார். பின்னர், அவரது வாரிசுகள் வழக்கைத் தொடர்ந்து நடத்தினர். மனுவை விசாரித்து, பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி, மத்திய உள்துறைச் செயலர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார்.  

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தனர். அதில், ``சுதந்திரப் போராட்ட தியாகி பெரியய்யா, மாநில அரசின் தியாகி ஓய்வூதியம் பெற்றுவருகிறார். இதனால், அவரது சுதந்திரப் போராட்ட பங்கேற்பை கேள்வி கேட்க முடியாது. எனவே,  பெரியய்யாவுக்கு மத்திய அரசின் தியாகி ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான விண்ணப்பத்தை மதுரை ஆட்சியர் 4 வாரத்தில் தமிழக அரசுக்கும், தமிழக அரசு 6 வாரத்தில் மத்திய அரசுக்கும் பரிந்துரைக்க வேண்டும். மத்திய அரசு 8 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!