வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (30/06/2018)

கடைசி தொடர்பு:17:02 (01/07/2018)

``ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா சத்குரு?!" - ஜக்கி வாசுதேவுக்கு ஒரு தந்தையின் கேள்வி!

தங்களின் மகள்களுக்கு மொட்டையடித்து, மூளைச் சலவை செய்து, சட்ட விரோதமாகச் சிறைவைத்துள்ளதாக ஈஷாவுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திவரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், ஜக்கி வாசுதேவின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

``ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா சத்குரு?!

``காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை…" - 13 பேர் படுகொலை செய்யப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சொன்ன கருத்து இது. பாபா ராம் தேவைத் தொடர்ந்து, ஜக்கி வாசுதேவும் இந்த கம்பெனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக, உயிரிழந்த மக்களுக்காகவோ ஸ்டெர்லைட் ஆலையால் நோய்வாய்ப்பட்ட மக்கள் குறித்தோ பேசாமல், கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பேசிய ஜக்கி வாசுதேவுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ``இது, காப்பர் வியாபாரத்தைப் பேசுவதற்குச் சரியான தருணம் இல்லை. காவல் துறை செய்த கொலைகள் பற்றிப் பேசுங்கள்" என நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தங்களின் மகள்களுக்கு மொட்டையடித்து, மூளைச் சலவை செய்து, சட்ட விரோதமாகச் சிறைவைத்துள்ளதாக ஈஷாவுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்திவரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் காமராஜ், ஜக்கி வாசுதேவின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர், ``தூத்துக்குடியில் பிறந்து, முதல் தலைமுறை பட்டதாரியாக வளர்ந்தேன். பிறகு பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றேன். இந்த நிலையில், இன்று  ஈஷாவில் இரண்டு பெண் பிள்ளைகளை இழந்து, அவர்களை மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறேன். கோவை நீதிமன்ற வளாகத்தில் ஒவ்வொரு வாய்தாவுக்கும் என் பிள்ளைகள் வரமாட்டார்களா... அவர்களோடு சில மணி நேரம் தனியாகப் பேசமாட்டோமா என்று ஏங்குகிறேன். அப்படிக் காத்திருக்கும் ஒரு தகப்பனின் வலியை உணரத் தெரியாத உங்களுக்கு (ஜக்கி வாசுதேவுக்கு), 13 உயிர்களை பலி கொடுத்து தங்கள் மண்ணைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிவரும் சாமான்ய மனிதர்களைப் பற்றிய உங்கள் பார்வை எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. `காப்பர் உருக்குவதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், பெரிய தொழில் நிறுவனங்களை முடக்குவது பொருளாதாரத் தற்கொலை’ என்ற தங்கள் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதைப் பற்றி அறிந்தேன். 

கடந்த காலங்களில் விவசாய நிலங்களை வாங்குவதற்காகப் பழங்குடி மக்களையும் பட்டியல் இன மக்களையும் நீங்கள் பயன்படுத்திய விதம் ஒரு தேர்ந்த நிலத்தரகரைப் போன்றது. நல்ல விவசாயிகளிடம் நிலத்தை வாங்க வேண்டுமென்றால், அவர்களின் தொழிலாளர்களை முதலில் பறிக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, அந்தப் பகுதியில் விவசாயக் கூலிகளாக இருந்தவர்களைக் கூடுதல் கூலி போன்ற சில சலுகைகளைக் காட்டி எப்படி வளைத்தீர்கள் என்பது உலகம் அறியாத ரகசியம். சமூகச் சேவை என்ற பெயரில் என் இரு குழந்தைகளை ஏமாற்றி எங்கள் தொண்டு நிறுவனத்தை அபகரிக்க முயன்றபோதுதான் தங்கள் சுயரூபம் வெளியில் தெரிந்தது. விலகிச் செல்லலாம் என்ற நிலையில், எங்கள் குழந்தைகளைப் பிடித்துவைத்து எங்களைத் தனிமைப்படுத்தினர். அப்போதுதான், திட்டமிடப்பட்டுப் பெற்றோர்களிடமிருந்து பல பிள்ளைகளைப் பிரித்து அவர்களது உடைமைகளை தானம் என்ற பெயரில் பறித்து வெளியில் எங்கும் செல்ல வழியில்லாமல் செய்த காரியங்கள் எல்லாம் தெரியவந்தது. 

காமராஜ்ஆன்மிகம் என்ற பெயரில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு மொட்டைக்குப் பின்னர், ஒரு சந்ததியின் முன்னேற்றக் கனவு சமாதியாக்கப்பட்டது. நீங்கள் நடப்பட்ட மரங்கள் வளர்ந்ததோ இல்லையோ... குருவிகள் கூடுகள் கட்டியதோ இல்லையோ... தங்கள் கட்டடங்கள் மரங்களைவிட உயரமாக வளர்ந்தன; பெரும் வன விலங்குகளும் அவற்றைக் கண்டு அதிர்ந்தன. தரைவழியாக வந்த சாமான்ய கூட்டம், வான்வழியாக வந்தவர்களிடம் தங்களைச் சேர்த்தது. இப்போது வான்வழியாக வருபவர்களுடன் தாங்களும் வானத்தில் பறக்கிறீர்கள். உங்கள் பறத்தலுக்கு எங்களைப் போன்ற பெற்றோர்களின் ரத்தம் எரிபொருளாகி எரிவதைப் பற்றிக் கொஞ்சம்கூட தாங்கள் யோசிப்பதில்லை. ஏனெனில், எரி காடுகளையும் உங்கள் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டார்கள், சுடுகாட்டுக் கொட்டகையில் ஊழல் செய்த அரசியலாளர்கள். ஒருவேளை, அந்தக் கணக்குகளைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். 

`செத்துப்போன 13 பேர் தரையில் போறவன்' என்று நினைத்து நக்கலாகப் பேசலாம். சுற்றுச்சூழல் பிரச்னைகளைச் சட்டபூர்வமாகக் கையாள வேண்டும் என்ற அர்த்தம் என்றால், போபால் ஆலையை மீண்டும் திறந்திடலாமா? அதுவும் சுற்றுச்சூழல் பிரச்னைதானே. அவர்களுக்கு இந்த அரசாங்கம் கொடுத்த இழப்பீடு இன்னும் வந்தபாடில்லை. ஸ்டெர்லைட்டில் வெளியேற்றப்பட்ட கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி உங்களுக்குத் தெரியுமா, அவர்களின் நோய்களைப் பற்றித் தெரியுமா, எதுவும் தங்களுக்குத் தெரிய தேவையில்லை. ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபையில் அமரவைக்க அனில் அகர்வால் தேவைப்படுவார். ஒரு சாமன்யன் அல்ல. உங்கள் வாயால் நீங்கள் கக்கிய வார்த்தைகள் உங்களைப் பற்றி அம்பலப்படுத்தியிருக்கிறது. அதனால்தான், `ஜக்கி ஒரு கார்ப்பரேட் சாமியார்' என்று குற்றம்சாட்டினேன்'' என்று காமராஜ் விமர்சித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகச் சத்குரு ஜக்கி வாசுதேவ் கருத்துக் குறித்தும் காமராஜ் முன்வைக்கும் விஷயங்கள் குறித்தும் விரிவான விளக்கம் பெற ஈஷா யோக மையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொண்டோம். விரிவான விளக்கத்துக்குக் காத்திருக்கிறோம். விளக்கமளித்தால், பரிசீலனைக்குப் பின் அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.


டிரெண்டிங் @ விகடன்