வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (29/06/2018)

கடைசி தொடர்பு:09:56 (30/06/2018)

`நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பரிசீலித்து அனுமதி' - காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

 

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரிசீலித்து அளிக்க வேண்டும்' என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் தமிழ் மாந்தன். இவர், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், ``ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி, தூத்துக்குடி போலீஸாரிடம் மனு அளித்தேன். ஆனால், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டார்கள். எனவே, நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்து ``சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வரும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டது" என்றனர். ஆனால், மனுதாரர் தரப்பில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கிருஷ்ணகுமார், ``அந்த 50 பேரும் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் தனித்தனியாக 30-ம் தேதிக்குள் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை காவல்துறை பரிசீலித்து, பழைய காரணங்களைக் கூறி நிராகரிக்காமல், 4-ம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.