வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:08:18 (30/06/2018)

நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி - நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி!

கோவில்பட்டி அருகேயுள்ள தலையால்நடந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த முண்டகசாமி என்பவர், தனியார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த தன் இரு மகன்களை போலீஸார் கைதுசெய்துள்ளதாகக் கூறி, கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

முண்டகசாமி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ளது, தலையால்நடந்தகுளம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முண்டகசாமி. இவரின் விவசாய நிலத்துக்கு அருகில் தனியார் காற்றாலை நிறுவனம் காற்றாலை அமைத்துவருகிறது. இந்நிலையில், தனியார் காற்றாலை நிர்வாகம் இவரின் நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்புச் செய்ததாக முண்டகசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. 

ஆனால், முண்டகசாமியின்  நிலத்தில் குறிப்பிட்ட பகுதியில் காற்றாலையின் உதிரிபாகங்களைத் தனியார் காற்றாலை நிறுவனம் அடுக்கிவைத்துள்ளனராம். இந்தக் காற்றாலைப் பணிகளை மேற்பார்வைசெய்ய வந்த கம்பெனியினரிடம், தங்களது விவசாய நிலப்பகுதியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள உதிரிபாகங்களை அப்புறப்படுத்துமாறு முண்டகசாமியின் மகன்கள் கருத்தப்பாண்டி, சிவபெருமாள் ஆகியோர் தகராறு செய்ததாக, அந்த கம்பெனி நிர்வாகம் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

அதன் பெயரில் கயத்தார் போலீஸார் கருத்தப்பாண்டி, சிவபெருமாள் இருவரையும் கைதுசெய்துள்ளனர். தன் இரு மகன்களையும்,  தனியார் காற்றாலை நிர்வாகத்துக்கு ஆதரவாக போலீஸார் பொய் வழக்குப் போட்டு கைதுசெய்து, சித்ரவதை செய்வதாகக் கூறி முண்டகசாமி திடீரென கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த போலீஸார் அவரைத் தடுத்து, கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க