பாவமன்னிப்புக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு உத்தரவு!

கேரள மாநிலம் கோட்டயத்தில், பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து, குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபை

கேரள மாநிலம் திருவல்லாவில் உள்ள மலங்கரை ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சபையில் பாவமன்னிப்புக் கேட்கச் சென்ற திருமணம் ஆன பெண்ணை, பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அந்தப் பெண் செய்த தவற்றை அவரது கணவனிடம் கூறிவிடுவதாக மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்தப் பாதிரியார். பெண்ணுடன் தனியாக இருக்கும் புகைப்படத்தை மேலும் 4 பாதிரியார்களுக்கு அனுப்பியதால், அவர்களும் அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம், கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியிருக்கிறது சர்ச் நிர்வாகம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சர்ச் நிர்வாகி ஒருவருடன் பேசும் ஒரு ஆடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அதில், ``எனது மனைவிக்கு ஏற்பட்ட பிரச்னைபோன்று இனி யாருக்கும் ஏற்படக் கூடாது. சர்ச்சில் பெண்கள் நம்பிக்கையுடன் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். குற்றம் செய்த பாதிரியார்கள் இனி சர்ச்சுக்கு வராமல் இருக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நான் எந்தத் தியாகமும் செய்யத் தயார்" என்று கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில், பாதிரியார்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ள கேரள டி.ஜி.பி-க்கு முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் எழுதியிருந்த கடிதத்தில், ``பாதிக்கப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கவில்லை என்றும், அவர் கணவன் சர்ச் நிர்வாகத்துக்கு மட்டுமே புகார் அளித்தார் என்றும் கூறுவதை ஏற்க முடியாது. இது, கேரள காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும். எனவே, ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, இந்தச் சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவு போலீஸார்  வழக்கை விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாவமன்னிப்புக் கேட்கவந்த பெண்ணை ஹோட்டலில் அறை எடுத்து பாலியல்  வன்கொடுமை செய்த பாதிரியார், அந்தப் பெண்ணை வைத்தே அறை வாடகையைக் கொடுக்கவைத்துள்ளார். கணவரின் டெபிட் கார்டு மூலம் ஹோட்டலுக்குப் பணம் செலுத்தியிருக்கிறார் அந்த பெண். பணம் செலுத்தப்பட்டதுகுறித்த குறுஞ்செய்தி, பெண்ணின் கணவரின் மொபைல் போனுக்கு சென்றதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!