வெளியிடப்பட்ட நேரம்: 22:19 (29/06/2018)

கடைசி தொடர்பு:12:03 (30/06/2018)

கடனைக் கேட்டு ராஜஸ்தான் சென்ற கோவை ஜவுளி வியாபாரிகள்மீது துப்பாக்கி முனையில் தாக்குதல்!

வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு… இந்தப் பழமொழியைத் தமிழகத்தில் இருப்பவர்களைவிட, மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான், கடந்த சில தசாப்தங்களாக, தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து ஏராளமானோர் வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். கொத்தனார் வேலை முதல், ஜவுளித்துறை வரை, அனைத்துத் துறைகளிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடனைக் கேட்டு ராஜஸ்தான் சென்ற கோவை ஜவுளி வியாபாரிகள்மீது துப்பாக்கி முனையில் தாக்குதல்!

பொதுவாக,`வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்று சொல்லப்படுவதுண்டு. இதை, தமிழகத்தில் இருப்பவர்களைவிட, மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் நன்கறிவார்கள். அதனால்தான், கடந்த சில தசாப்தங்களாக, தமிழகத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து ஏராளமானோர் வருகை புரிந்தவண்ணம் இருக்கின்றனர். கொத்தனார் வேலைமுதல் ஜவுளித் துறை வரை அனைத்துத் துறைகளிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற கொங்கு மாவட்டங்களில், புறநகர்ப் பகுதிகளிலும் வட இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, இந்த மாவட்டங்களில் ஜவுளித் துறை பிரதானமான ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. இதனால், இந்தத் தொழிலிலும் வட இந்தியர்கள் காலூன்ற ஆரம்பித்தனர்.  சுமார், 2 ஆயிரம் வட இந்தியர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஜவுளித் துறை உற்பத்தியாளர்களிடமிருந்து, கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். அப்படி வியாபாரம் செய்பவர்களுக்குக் கடனும் வழங்கப்படும். ரெகுலராக பர்சேஸ் செய்வதால், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் வழங்கப்படும். அப்படி, ஜவுளி வாங்கும் வட இந்தியர்கள், பல நூறு கோடி ரூபாய் தொகையை நிலுவையில் வைத்துவிட்டு, மீண்டும் அவர்களது மாநிலத்துக்குச் சென்றுவிடுகின்றனர்.

தமிழகம்

அப்படி, பல கோடி நிலுவையில் வைத்துச்சென்ற, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம், நிலுவைத்தொகையைத் திருப்பிக் கேட்கச் சென்ற தமிழர்களை, துப்பாக்கி முனையில் அடித்துத் துரத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறார், தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர் ஒருவர். 

``சோமனூரில் நீண்டகாலமாகத் துணி கொள்முதல் செய்துவந்த அம்ரீஸ் (ஓம் பிரகாஷ்) குடும்பத் திருமண விழாவுக்காக, வெண்ணிலா டெக்ஸ் மணி விநாயகா, டெக்ஸ் நடராஜ் மற்றும் மாதப்பூர் ஏ.வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகருக்குக் கடந்த வாரம் சென்றனர். 22-ம் தேதி இரவு, அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த அறையில் தங்கிவிட்டு, 23-ம் தேதி அதிகாலை அருகே இருந்த கோயிலுக்குச் சென்றுள்ளார்கள். சென்ற இடத்துக்கு அருகே, ஜோட்டன் என்ற ஊர் இருந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவை மாவட்டம் சோமனூரில் ஏராளமானோரிடம் பல கோடி ரூபாய்க்குத் துணி வாங்கிவிட்டு ஏமாற்றி ஓடிய வீரோத்ரா கெளதம் என்பவரின் ஊர் அது என்பதை அறிந்து, ஜவுளி உரிமையாளர்கள் அவரது வீட்டுக்குச் சென்று வரலாம் என்று முடிவு செய்தனர். 

வட இந்தியர்கள் தாக்குதல்

அங்குச் சென்றபிறகு கௌதமின் மனைவி, தமிழர்களைப் பார்த்ததும்... அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து சத்தம் போட்டிருக்கிறார். இதனால், அங்கிருந்து திரும்பிய இவர்கள், அருகே இருந்த கெளதமின் மாமனார் வீட்டுக்குச் சென்று பணம் வரவேண்டிய விவரத்தைக் கூறியுள்ளனர். `சரி நீங்க புறப்படுங்க. நான் கெளதமிடம் பேசிக் கூப்பிடச் சொல்றேன்' என்று கௌதமின் மைத்துனர் சொன்னதாலும், பணத்துக்காகத் திட்டமிட்டு அங்குப் போகாததாலும் மூவரும் அங்கிருந்து திரும்பிவிட்டனர். டிரைவர் வண்டியை எடுக்க, பாலைவனத்தின் வழியாகத் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அதிகம் போக்குவரத்து இல்லாத அந்தப் பாலைவனச் சாலையில், வாகனம் ஒன்று இவர்களின் பின்னால், `ஹாரன்' சப்தம் எழுப்பியவாறு பின்தொடர்ந்து வந்துள்ளது. ஒருகட்டத்தில், இவர்களது வண்டியின் ஓரமாக லேசாக மோதியுள்ளது. என்னவோ... ஏதோ என்று பதற்றமான இவர்களது வண்டியின் ஓட்டுநர், சாலையின் ஓரமாக வண்டியை நிறுத்தியுள்ளார்.

அந்த வண்டியிலிருந்து கைத்துப்பாக்கியோடு குதித்த ரவுடி ஒருவன், இவர்களது கார் முன் துப்பாக்கியைக் காட்டியபடி நின்றுள்ளான்.  இதைத் தொடர்ந்து, இரும்புத் தடி, உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றோடு வண்டியிலிருந்து இறங்கியுள்ளார்கள். திருடர்கள்தாம்  வந்துள்ளார்கள் என்று நினைத்து இவர்கள், கையில் இருந்த பணம், மோதிரம் ஆகியவற்றை அவர்களிடம் நீட்டியுள்ளனர். ஆனால், அதை வாங்காத ரவுடிக் கும்பல், தாங்கள் கொண்டுவந்த கடப்பாரை, உருட்டுக்கட்டைகளால் இவர்களையும் வாகனத்தையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். `இந்தப் பாலைவனத்தில்தான் நமது உயிர் போகப் போகிறது' என்று இவர்கள் அஞ்சிய நிலையில், அந்த வழியாகப் பெரும் சத்தத்தோடு ராணுவ வாகனம் ஒன்று வந்துள்ளது. அதைப் பார்த்த ரவுடிக் கும்பல், இவர்களை விட்டுவிட்டுத் தங்களது வண்டியில் தப்பி ஓடிவிட்டனர். பிறகு, அங்கிருந்த மிகச்சிறிய மருத்துவமனை ஒன்றில் முதலுதவி பெற்றுவிட்டு, உடனடியாக விமானத்தில் கோவைக்கு வந்து இறங்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், நடராஜ் மற்றும் மணி ஆகியோரின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சுப்பிரமணிக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ள்ளது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். நூலிழையில், உயிர் பிழைத்த இவர்கள் இன்னும் பதற்றத்துடனே இருக்கின்றனர். தொழில் செய்வது பற்றி மிகுந்த அச்சத்தில் உள்ளனர்" என்று சம்பவத்தை விவரித்தார் தாக்குதலுக்கு உள்ளான உறவினர்களில் ஒருவர்.

கௌதம் சேட் - ஜவுளி

``சோமனூரில் மட்டும் நாளொன்றுக்குச் சுமார் 150 கோடி ரூபாய்க்கு ஜவுளித் துறையில் வர்த்தகம் நடக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பாதுகாப்பானது என்பதால், வட இந்தியர்கள் தமிழகத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். கௌதம் சேட்டு மட்டுமல்ல, அவரைப்போல ஏராளமானோர் பல கோடி ரூபாய் தொகையைச் சுருட்டியுள்ளனர். இப்படி, சுமார் 1,000 கோடி ரூபாய் தொகை நிலுவையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் 300 கோடி ரூபாய் நிலுவையில் வைத்துள்ளார். இதனால், இங்கு ஜவுளி வியாபாரம் செய்வோர் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை வெளியில் சொன்னால் வியாபாரம் பாதிக்கும் எனக் கூறி பலரும் தங்களுக்குள்ளேயேவைத்து மறைத்துவிடுகின்றனர். இங்கிருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களின், சொத்துகள் வங்கியில்தான் அடமானமாக இருக்கின்றன. இதனால் அவர்களின் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், நமது ஊருக்கு வந்தே அவர்கள் தாக்கும் நிலை உருவாகும். எங்களுக்குத் தொழில் பாதுகாப்பு வேண்டும். இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மேலும், போலீஸில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தை மீண்டும் தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வந்தோரை வாழ வைப்பது முக்கியம்தான். ஆனால், அதற்கு முன்பு, சொந்த மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை.


டிரெண்டிங் @ விகடன்