வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (30/06/2018)

கடைசி தொடர்பு:07:22 (30/06/2018)

டாஸ்மாக் வாகனத்துக்குத் தீ வைத்த விவகாரத்தில் வேல்முருகனுக்கு முன் ஜாமீன்!

 

வேல்முருகன்

திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் வாகனத்துக்குத் தீ வைத்த விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு   உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ``ஜூன் 1 -ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடவுனில் இருந்து கடைகளுக்கு விநியோகம் செய்ய 25 லட்சத்து 15 ஆயிரத்து 320 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளப்பம்மன்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் மதுபாட்டில்கள் இருந்த வாகனத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர்கள் ``எங்கள் கட்சித் தலைவரைச் சிறையில் அடைத்துவிட்டு நீங்கள் மதுபாட்டில்கள் விநியோகம் செய்கிறீர்களா?" எனக் கூறி மதுபானங்களுக்குத் தீ வைத்து எரித்தனர். இதில் 7 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் நடந்தபோது நான், சுங்கசாவடி சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் இருந்தேன், எனக்கும் இச்சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீஸார் என்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, டாஸ்மாக் வாகனத்துக்குத் தீ வைத்த விவகாரம் தொடர்பாக வடமதுரை காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட வழக்கு பதிவில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்நிலையில் விசாரணையின்போது “சம்பவத்தன்று வேல்முருகன் சென்னையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும், இந்த வழக்கில் அவர் சம்பவத்தில் தொடர்பு இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. எனவே, வேல்முருகனுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.