`சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல’ -அருண் ஜெட்லி | Finance minister Arun Jaitley comment on swiss bank issue

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/06/2018)

கடைசி தொடர்பு:07:09 (30/06/2018)

`சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல’ -அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதுதொடர்பாக முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அருண் ஜெட்லி

சுவிஸ் வங்கியில் உள்ள டெபாசிட் தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி வெளியிட்டுள்ளது.  டெபாசிட் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகள் குறைந்திருந்தது. ஆனால், இது 2017-ம் ஆண்டில் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  சுவிஸ் வங்கியில் நேரடியாக இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் தொகை ரூ.6,891 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான பிரசாரத்தை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அவர்கள் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாக சுவிஸ் வங்கியில் குறைந்து வந்த இந்தியர்களின் டெபாசிட் 4-வது ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ``சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் கிடையாது. சுவிஸ் வங்கியில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து உள்நாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்நாட்டு அரசு பல நாடுகளுடன் தகவல் வெளிப்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. 2019 ஜனவரி முதல் தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன். சட்ட விரோதமாக யார் முதலீடு செய்தாலும் அவர்கள் மீது இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பண சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.