மாயமான 12 இளம் கால்பந்து வீரர்கள்; சோகத்தில் தாய்லாந்து நாட்டு மக்கள்!

ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்று இந்த வேளையில், தாய்லாந்து நாட்டில் 12 இளம் கால்பந்து வீரர்கள் காணாமல் போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காணாமல் போன கால்பந்து வீரர்களை மீட்கும் பணி

தாய்லாந்து நாட்டில் இளம் கால்பந்து வீரர்கள் குழு ஒன்று தங்களின் பயிற்சியாளருடன் ஒரு குகைக்குள் சென்றனர். இந்த வீரர்கள் அனைவரும் 11 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். எல்லோரும் பள்ளி மாணவர்கள். கடந்த சனிக்கிழமை (ஜூன் 23) அன்று நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் விளையாடிவிட்டு 12 இளம் வீரர்கள், 25 வயதான தங்களின் பயிற்சியாளருடன் அந்தக் குகைக்குச் சென்றனர். 

காணாமல் போன கால்பந்து வீரர்களை மீட்கும் பணி

தி தம் லுஅங் குகை, வடக்கு தாய்லாந்துப் பகுதியில் சியாங் ராய் என்னும் இடத்தில் உள்ளது. சில கிலோமீட்டர் தூரம் செல்லும் அளவுக்கு நீண்ட குகை அது. கனமழை காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கும். இதன் பாதைகள் நேராக இல்லாமலும் கரடு முரடாகவும் இருக்கும். வடக்கு தாய்லாந்துப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் இந்த குகைக்குள் திடீர் வெள்ளம் புகுந்தது.  இதில்தான் 12 இளம் வீரர்களும், அந்தப் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டனர். 

காணாமல் போன கால்பந்து வீரர்களை மீட்கும் பணி

கனமழை தொடர்ந்ததால், உள்ளே இருப்பவர்களை மீட்க முடியாமல் மீட்புக் குழு தவித்தது. குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற கடுமையாக முயற்சி செய்தும், அவை பலனளிக்கவில்லை. எனினும் சுமார் 6 நாள்கள் கழித்து மழையின் தாக்கம் குறைந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணிகளில் இறங்கினர். எனினும் குகை முழுவதும் கடும் சேரும் சகதியுமாக இருந்ததால் அவர்களால் வேகமாக முன்னேற முடியவில்லை. மேலும் குகையின் தொடக்கப்பகுதியில் மட்டுமே தண்ணீர் இல்லாமல் இருந்தது. குகையின் உட்பகுதியில் இன்னும் தண்ணீர் இருந்தது. 

காணாமல் போன கால்பந்து வீரர்களை மீட்கும் பணி

உள்ளே இருக்கும் கால்பந்து வீரர்களை மீட்க மீட்புக் குழுவுடன் அமெரிக்க ராணுவமும், குகைகளில் ஆய்வு நடத்தும் இங்கிலாந்துக் குழுவும் இணைந்துள்ளது. அவர்களுடன் கடலில் உள்ளே நீந்திச் செல்லும் சீல் டைவர்ஸ் குழுவும் தண்ணீருக்கும் செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால், கலங்கிய சகதி தண்ணீரில் அவர்களால் கொஞ்சம்கூட முன்னேற முடியவில்லை.

பிரார்த்தனை

இந்த 7 நாள்களும் இளம் வீரர்களின் உறவினர்கள் குகை இருக்கும் பகுதியில் பிரார்த்தனை செய்தபடி இருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த அந்நாட்டுப் பிரதமர், உறவினர்களிடம் நம்பிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும், உங்களின் நம்பிக்கை அவர்களைக் கொண்டு வரும் என நம்பிக்கை அளித்தார். கடும் வெள்ளத்தில் அவர்கள் உலர்ந்த இடத்தில் பத்திரமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் நம்பிக்கை பலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!