கால்பந்தை காப்பாத்துங்க..! வீதிகளில் விளையாடி அசத்திய மாணவர்கள்

உலக வரைபடத்தில் சிறு புள்ளிகளாக இருக்கும் நாடுகள்கூட கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், உலக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் விளையாட முடியவில்லை. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் ஆர்வமும் முக்கியத்துவமும் கால்பந்து விளையாட்டுக்கு இல்லை. இத்தனை கோடி மக்கள் இருந்தும் எத்தனையோ திறமையான வீரர்கள் இருந்தும் கால்பந்துப் போட்டியில் இந்தியாவால் சாதிக்க முடியவில்லை. இது சர்வதேச அளவில் வெட்கப்பட வேண்டிய விஷயம். உடலை வலிமையாக்கும் கால்பந்து விளையாட்டு குறித்து கிராமப்புற இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் ஆர்வத்தை ஏற்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் 'கால்பந்தை காப்பாத்துங்க' என்ற கோஷத்துடன் மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் மற்றும் ராயல் கால்பந்துக் கழகம் இணைந்து கால்பந்து விளையாட்டு விழிப்பு உணர்வு ஊர்வலம் ஒன்றை நடத்தியது. 

கால்பந்து

ஒரே சீருடையில் நூற்றுக்கணக்கில் அணிவகுத்து வந்த மாணவர்கள், சாலைகள், தெருமுனைகள், வீதிகள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் கால்பந்து விளையாடி அசத்தினர். நேற்று வத்தலக்குண்டு நகர் முழுவதும் கால்பந்து மயமாகவே காட்சியளித்தது. இதைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். இதுகுறித்துப் பேசிய ராகுல் கால்பந்து கழகச் செயலாளர் முத்துப்பாண்டியன், 'கிராமப்புற மாணவர்களிடம் கிரிக்கெட் மோகம் அதிகளவில் உள்ளது. அதே நேரம் கால்பந்து குறித்த விழிப்பு உணர்வு இல்லை. இதை மாற்றி கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காக இந்த ஊர்வலத்தை நடத்தினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஏராளமான கிராம மக்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் அதிக கால்பந்து வீரர்களை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறோம்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ரெக்ஸ் பீட்டர், வத்தலகுண்டு இன்ஸ்பெக்டர் முருகன், கால்பந்துக் கழகப் பொருளாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!