வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (30/06/2018)

கடைசி தொடர்பு:14:09 (30/06/2018)

10 ஆண்டுகளுக்குப்பின் வீட்டுக்கு வந்த மீனாட்சி! கட்டாயத் திருமணத்தால் வெளியேறியதாக வாக்குமூலம்

குடும்பத்தினருடன் மீனாட்சி

அரக்கோணத்தைச் சேர்ந்த இளம்பெண் மீனாட்சிக்கும் அவரின் தாய்மாமனுக்கும் கட்டாயத் திருமணம் நடந்துள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியேறிய அவர், 10 ஆண்டுகளுக்குப்பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்தார். 

வேலூர் மாவட்டம், அரக்கோணம், தாலுகா, வளர்புரம் போஸ்ட், கிருஷ்ணாபுரம், பழைய காலனி பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரின் மனைவி சாந்தி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் மீனாட்சி என்கிற நந்தினி. பத்தாம் வகுப்பு வரை படித்த இவருக்கும் இவரின் தாய்மாமனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.  இந்த திருமண வாழ்க்கை நந்தினிக்கு கடும் துன்பத்தைக் கொடுத்தது. இதனால், வீட்டை விட்டு வெளியேறினார். ஆந்திரா, நகரியில் உள்ள உறவினர் வீட்டில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கும் பிரச்னைகள் ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ஒருகட்டத்தில் அவர், தன்னையே மறந்தார். ஆவடி ரயில் நிலைய பகுதியில் மனம் போல சுற்றித் திரிந்தார். 

22 வயது இளம்பெண் மீனாட்சி மீது பலரின் பார்வை விழுந்தது. கருணை உள்ளம் கொண்ட ஒருவர், ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு 1.7.2016-ல் ஆவடி, வீராபுரத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மன அழுத்தத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு மீனாட்சி முழுமையாக குணமடைந்தார். தன்னுடைய முழுவிவரங்களைக் காப்பகத்தில் உள்ளவர்களிடம்  தெரிவித்ததோடு, வீட்டுக்குச் செல்ல விரும்புவதாகவும் கூறினார். தொடர்ந்து, மீனாட்சியை அவரின் குடும்பத்தினருடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

சமூக சேவகர்கள் வெங்கடேஷ், ஜின்னா, சேவகி வசந்தி ஆகியோர் மீனாட்சியிடம் பேசி, அவரின் முகவரியைக் கேட்டறிந்தனர். பிறகு திருவள்ளூரில் உள்ள அன்னை தெரசா இளைஞர் அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் மூலம் மீனாட்சியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது, மீனாட்சி மாயமாகி 10 ஆண்டுகளான தகவலை அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மீனாட்சி உயிரோடு இருக்கும் தகவலைத் தெரிந்த அவரின் குடும்பம் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது. தொடர்ந்து மீனாட்சியை அவரின் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அவரை நேரில் பார்த்த சாந்தி மற்றும் அவரின் உறவினர்கள் கட்டித்தழுவி, உச்சி முகர்ந்து ஆரத்தழுவினர். அதைப்பார்த்த அனைவரின் கண்களும் மகிழ்ச்சியில் குளமாகின. தொடர்ந்து ஊர் பெரியவர்கள் ஆசீர்வாதம், சாமுவேலுவும் மீனாட்சி ஊர் திரும்பிய தகவலைத் தெரிந்து அங்கு வந்தனர். மீனாட்சியைப் பார்க்க ஊரே அங்கு திரண்டது.  தன்னைக் குடும்பத்தினருடன் சேர்த்த ராஜ்குமாருக்கு நன்றிகளை கண்ணீர்மல்க தெரிவித்தனர் மீனாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினர்கள். 

மீனாட்சி நம்மிடம் கூறுகையில், ``தாய்மாமனுக்கும் எனக்கும் கட்டாயத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. திருமணத்துக்குப்பிறகு தாய்மாமனின் நடவடிக்கைகள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இதனால்தான் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் மனம்போன போக்கில் சென்றேன். ஆந்திரா, தமிழ்நாடு என பல இடங்களில் சுற்றினேன். அப்போது எல்லாம் நான் யார் என்றே எனக்குத் தெரியாது. பல நேரங்கள் பட்டினியாக இருந்துள்ளேன். யாராவது கொடுத்ததை சாப்பிட்டு ரயில், பஸ் நிலையங்களில் படுத்துறங்கினேன். அப்போதுதான் ஆவடி டேங்க் ஃபேக்டரி போலீஸார் என்னை மீட்டு, காப்பகத்தில் சேர்த்தனர். காப்பகத்தில் உள்ளவர்கள் என்னை அன்பாக நடத்தினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் என்னை பழைய நிலைமைக்குத் திருப்பியுள்ளது. இனிமேல் என் குடும்பத்தை நான்தான் காப்பாற்றுவேன்" என்றார் மகிழ்ச்சியுடன். 

மீனாட்சி, 10 ஆண்டுகளுக்குப்பிறகு வீட்டுக்கு திரும்பியிருந்தாலும் அவரின் குடும்பத்தில் பல மாற்றங்கள் காணப்பட்டன. மீனாட்சியின் தந்தை துரைராஜ், மரணமடைந்து மூன்று ஆண்டுகள் கடந்திருந்தன. அவரின் அம்மா சாந்தியும் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு தங்கைக்கு திருமணம் முடிந்திருந்தது. ஆனால், ஒன்றுமட்டுமே அப்படியே அந்தக் குடும்பத்தில் குடியிருந்தது. அதுதான் வறுமை. மீனாட்சி வீட்டை விட்டு வெளியேறியபோது, இருந்த அதே குடிசை வீட்டில்தான் அவர்கள் தற்போதும் குடியிருந்துவருகின்றனர்.