'அப்பாவை ஏன் சுட்டாங்கன்னு அரசாங்கம் சொல்லணும்' - ஜெயராமன் மகள் உருக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும்

``என் அப்பாவை ஏன் கொன்னோம்னு அரசாங்கம் எங்களிடம் வந்து சொல்லணும். அப்பத்தான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்'' என்று ஜெயராமனின் மகள் நந்தினி உருக்கமாகப் பேசினார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான பொய் வழக்கைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பினரால் மதுரையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், லஜபதிராய், இன்குலாப், சுப்பு முத்துராமலிங்கம், மில்டன்  உட்பட வழக்கறிஞர்களும், ஹென்றி டிஃபேன், பானுமதி உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களும், மக்கள் நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டனர். முன்னதாக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெயராமனின் மகள் நந்தினி


``ஸ்டெர்லைட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது. இதில் சட்ட விதிகள் எதுவும் கடைப்பிடிக்கவில்லை. இதுவரை 144 தடை உத்தரவு போட்ட ஆர்டர் காப்பியைத் தர மறுக்கிறார்கள். பாதிக்கப்படும் மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை பொய்யான வழக்கில் கைது செய்துள்ளனர்'' என்று பலரும் பேசினார்கள். முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசும்போது, ``தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கு நீதித்துறைக்கும் பங்கு உள்ளது. தன்னுடைய மக்களை அரசே கொல்வதென்பது ஜனநாயகப்படுகொலை. அதிலும் ஓரிரு நாளில் 15 பேர் கொல்லப்படுகிறார்கள் என்றால் ஜனநாயகம் செத்துவிட்டது என்று அர்த்தம்'' என்றார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான உசிலம்பட்டி ஜெயராமனின் குடும்பத்தினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஜெயராமனின் மகள் நந்தினி, ``என் அப்பா, மக்களுக்காகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் கொல்லப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். அதேநேரம், என் அப்பாவை ஏன் கொன்னோம்னு அரசாங்கம் எங்களிடம் வந்து சொல்லணும். அப்பதான் எங்களுக்கு நிம்மதி கிடைக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!