பதவி உயர்வுக்காகக் காத்திருந்த இன்ஸ்பெக்டர் அறைக்கு சீல்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி | Vigilance officers seal the Police inspector room for Bribe complaint

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (30/06/2018)

கடைசி தொடர்பு:14:45 (30/06/2018)

பதவி உயர்வுக்காகக் காத்திருந்த இன்ஸ்பெக்டர் அறைக்கு சீல்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தஞ்சாவூரில் லஞ்சப் புகாரில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஊரில் இல்லாததால் அவர் தங்கியுள்ள விடுதி அறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சீல் வைத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம்

தஞ்சாவூர் பள்ளிய அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் அந்தோணிசாமி, இதே ஊரில் மேலவீதியைச் சேர்ந்த பைனான்சியர் சந்திரனிடம், வீட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து 10.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு அசலும் வட்டியுமாக 12.50 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்திய பிறகும்கூட, தனது அடமானப் பத்திரங்களை சந்திரன் தர மறுப்பதாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் அந்தோணிசாமி புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர் மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் பைனான்சியர் சந்திரனிடமிருந்து பத்திரங்களை மீட்டுத்தர இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் தன்னிடம் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் அந்தோணிசாமி புகார் அளித்திருக்கிறார். இதன் பேரில் தீவிர நடவடிக்கையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், மேற்கு காவல்நிலையம் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்து ஜோதிமகாலிங்கத்தைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். அவர் தற்பொழுது ஊரில் இல்லாததால், அவர் தங்கியுள்ள விடுதியின் அறைக்குச் சென்று அதிரடியாக சீல் வைத்துள்ளார்கள். அறையைத் திறந்து பார்க்கவும், விசாரணைக்கு ஜோதிமகாலிங்கத்தை அழைக்கவும் அவருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்படும் என லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்துள்ளார்கள். ஜோதிமகாலிங்கம் டி.எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற இருந்த நிலையில், இந்த வழக்கில் சிக்கியுள்ளார். தற்பொழுது இவர் சென்னையில் டி.எஸ்.பி. பயிற்சிக்குச் சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.