வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (30/06/2018)

கடைசி தொடர்பு:14:01 (30/06/2018)

`3 தேவைகளுக்கு மட்டுமே கள்ளநோட்டைப் பயன்படுத்தினேன்'- மத்திய அரசு ஊழியர் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னையில் கள்ளநோட்டு விவகாரத்தில் சிக்கிய ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியருக்கும் டெல்லி பிரமுகருக்கும் உள்ள தொடர்பு குறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்

 கள்ள நோட்டு வழக்கில் சிக்கிய நாகசுப்பிரமணியன்

சென்னைப் பாலவாக்கம் பல்கலைக்கழக நகரைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன். இவர், அந்தப் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் 100 ரூபாய் நோட்டு கொடுத்து பால் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டின் மீது ஆவின் ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், நீலாங்கரை போலீஸாருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீஸார், நாகசுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, அவரின் வீட்டில் 2,00,248 ரூபாய் இருந்தது. அதைப்பறிமுதல் செய்த போலீஸார், வங்கியில் கொடுத்து ஆய்வு செய்தனர். அப்போது, 10,000 ரூபாய் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இவை அனைத்தும் 100 ரூபாய் நோட்டுகளாகும். இதையடுத்து நாகசுப்பிரமணியனை போலீஸார் கைது செய்தனர். அவர்மீது கள்ளநோட்டு வைத்திருந்ததாகவும், அதை மாற்றியதாகவும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நாகசுப்பிரமணியன், வருமானவரித்துறையில் பணியாற்றி, கடந்த 2009-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். இவரிடம் விசாரித்தபோது டெல்லியைச் சேர்ந்த ஒருவர் பணத்தைக் கொடுத்ததாக முதலில் எங்களிடம் தெரிவித்தார். ஆனால், அந்த டெல்லி நபர் குறித்து அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த வழக்கில் இன்னும் சிலருக்குத் தொடர்பு உள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும், இவரின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கான ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், நாகசுப்பிரமணியனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,``நாகசுப்பிரமணியனின் பின்னணி குறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அவர் ஓய்வு பெற்ற பிறகு, அடிக்கடி டெல்லிக்குச் சென்றுள்ளார். டெல்லியில் அவர் சந்தித்த நபர் யார் என்று தெரிந்தால் இந்த வழக்கில் உள்ள மர்மமுடிச்சுகள் அவிழ்ந்துவிடும். இதனால் டெல்லி நபர் குறித்து ரகசியமாக விசாரித்துவருகிறோம். 
 

கள்ள நோட்டு

வயதின் முதுமை காரணமாக அவரிடம் ஓரளவுக்கு மேல் விசாரிக்க முடியவில்லை. இதனால், அவரின் முழு பயோ டேட்டாக்களை சேகரித்துள்ளோம். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படிக் கிடைத்தது என்று நாகசுப்பிரமணியத்திடம் விசாரித்தபோது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெற்றதாக அவர் தெரிவித்தார். இதனால், சம்பந்தப்பட்ட வங்கியில் விசாரித்தபோது அவர் குறிப்பிட்ட தேதியில் பணம் வங்கியிலிருந்து பெற்றுள்ளார். ஆனால், அவை 2,000 ரூபாய் நோட்டுகள். இதனால் நாகசுப்பிரமணியன், ரூபாய் விவகாரத்தில் பொய் சொல்கிறார் என்று மட்டும் எங்களுக்குத் தெரிகிறது. மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் அனைத்தும் புதிதாகவே உள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளை காய்கறி, பால், மளிகை வாங்க, நாகசுப்பிரமணியனின் குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர். அவரைத் தவிர குடும்பத்தில் மற்றவர்களுக்கு இது, கள்ள நோட்டு என்று தெரியவில்லை. தற்போது, அவர் வாடகை வீட்டில் குடியிருந்துவருகிறார். அவரின் குழந்தைகளுக்குத் திருமணமாகிவிட்டது. இதனால்தான் நாகசுப்பிரமணியனை மட்டும் கைதுசெய்துள்ளோம். வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளோம். இந்த டீம், அவரின் செல்போன் தொடர்புகள், நட்பு வட்டாரங்கள் எனப் பல கோணங்களில் விசாரிக்கும். ஏற்கெனவே கள்ளநோட்டு வழக்கில் சிக்கியவர்களுக்கும் நாகசுப்பிரமணியனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிவில் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார். 

சென்னையில் சிக்கிய ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் நாகசுப்பிரமணியன் எத்தனை ஆண்டுகளாகக் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுவந்தார் என்பதே போலீஸாரின் பிரதான கேள்வியாக உள்ளது. ஆனால், அதுதொடர்பான விடை எதுவும் நாகசுப்பிரமணியத்திடமிருந்து கிடைக்கவில்லை. அவரின் மனைவியோ, எங்களுக்கும் கள்ள நோட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று நேற்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.