`ஆடி, தீபாவளி சிறப்புப் பரிசுத் திட்டங்களுக்குத் தடை' - தஞ்சை ஆட்சியர் அதிரடி!

தஞ்சையில் உள்ள வணிக நிறுவனங்கள் ஆடி, தீபாவளிக்கு சிறப்புப் பரிசுத் திட்டங்கள் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை எச்சரித்துள்ளார். இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தஞ்சை ஆட்சியர்

இதுதொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை,  ``வணிக நிறுவனங்கள் தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில் ஆடி மாதம், தீபாவளி, பொங்கல், ரம்ஜான் மற்றும் புத்தாண்டு போன்ற விசேஷ காலங்களிலும் சிறப்புப் பரிசுக் குலுக்கல் திட்டங்களை நடத்துகின்றன. இதைப் பயன்படுத்தி பொருள்களின் விலையை அதிகரிப்பதோடு, தரமற்ற பொருள்கள், பழைய கலப்பட பொருள்களை விற்பனை செய்கிறார்கள். சிறப்புப் பரிசுக் குலுக்கல் திட்டங்கள் சட்டவிரோதமானது. தஞ்சையில் உள்ள வணிக நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பரிசுப் போட்டிகள் தடைச்சட்டம் -1955, பரிசு சீட்டுத்திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் தடைச் சட்டம்- 1978, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச் சட்டம் 1979 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற திட்டங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இத்தனை சட்டங்கள் இருந்தும்கூட பெரிய வணிக நிறுவனங்கள், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை விளம்பரங்களாக வெளியிட்டு பொதுமக்களை கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை போலவே தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!